தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் நோய்த்தொற்று தடுப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒருபுறம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருக்கும் அரசு, மறுபுறம் பொதுமக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு, சில பாதுகாப்பு வழிமுறைகளுடன் தளர்வுகளையும் அறிவித்து வருகிறது.
அந்த வகையில் தற்போது, சென்னை மாநகராட்சி காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளைத் தவிர தமிழ்நாடு முழுவதும் ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷா ஆகிய வாகனங்கள் ஓட்டுநர் மற்றும் ஒரு பயணி மட்டும் பயணிக்கும் வகையில், நாளை முதல் (தினமும் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டும்) இயக்க அரசு அனுமதித்துள்ளது. ஆனால், நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இயக்க அனுமதியளிக்கப்படவில்லை.
பயணிகள் பயன்படுத்தும் வகையில் வாகனங்களில் சானிட்டைசர்களை ஓட்டுநர்கள் வைத்திருக்க வேண்டும், ஓட்டுநர்களும், பயணியர்களும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும், வாகனங்களை தினமும் மூன்று முறை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும், ஓட்டுநர்கள் அடிக்கடி சோப்பு கொண்டு கை கழுவியும், வாகனத்தில் சுகாதாரத்தையும் பேண வேண்டும் ஆகிய அறிவுரைகளையும் அரசு வழங்கியுள்ளது.
இதையும் படிங்க: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று முதல் முன் பதிவு தொடக்கம்