சென்னை: ஆவடியை அடுத்த திருநின்றவூர் நாச்சியார் சத்திரம் பள்ளிகூட தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் குமார். ஆட்டோ ஓட்டுநரான இவர், கடந்த 31ஆம் தேதி இரவு தனது மகளுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, அவரை திருமுல்லைவாயல் சி.டி.ஹெச். சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்திருந்தார்.
இந்த நிலையில், அவர் மகளைப் பார்க்க, மருத்துவமனைக்கு தனது ஆட்டோவில் வந்துள்ளார். ஆட்டோவை மருத்துவமனை வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு நள்ளிரவு தன் மகளுடன் இருந்துள்ளார்.
மறுநாள் காலை, நிறுத்தத்தில் இருந்த ஆட்டோ காணாமல்போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து, திருமுல்லைவாயில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர்.
திருடர்களைக் காட்டிக் கொடுத்த சிசிடிவி
விசாரணையின்போது, மருத்துவமனையில் உள்ள கண்காணிப்புக் கேமராவை காவல் துறையினர் ஆய்வுசெய்தனர். அதில் ரமேஷ் குமார் ஆட்டோவை நள்ளிரவில் இருவர் திருடிச் செல்வது (Aavadi Auto theft CCTV) தெரியவந்தது. கேமராவில் பதிவான உருவத்தை வைத்து காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவந்தனர்.
விசாரணையில் அவர்கள் நடுகுத்தகை கணபதி தெருவைச் சேர்ந்த பழனிச்சாமி, அவரது மகன் அபினேஷ் ஆகியோர் என்பது தெரியவந்தது. பின்னர் காவல் துறையினர் இருவரையும் பிடித்து காவல் நிலையம் அழைத்துவந்தனர்.
பின்னர் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியதில் அவர்கள் இருவரும் திருடிய ஆட்டோவை வேலூர் மாவட்டம் அருகே உள்ள வாழியூர் கிராமத்தில் நண்பர் ஒருவர் வீட்டில் பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது.
ஆட்டோ மீட்பு
இதனையடுத்து காவல் துறையினர் இருவரையும் அழைத்துக்கொண்டு ரமேஷ் குமாரிடமிருந்து ஆட்டோவை மீட்டனர். பின்னர், இருவரையும் அம்பத்தூர் நீதிமன்றத்தில் முன்னிறுத்தி பொன்னேரி கிளைச் சிறையில் அடைத்தனர். ஆட்டோ திருட்டுச் சம்பவத்தில் தந்தை, மகன் கைதானது சுற்றுவட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.