சென்னை - ஆவடி அடுத்த கோவில்பதாகை, பூங்கொடி நகரைச் சேர்ந்த அருள்முருகனும் அவரது மனைவியும் ஆவடி டேங்க் பேட்டையில் ஊழியராகப் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ஹரிப்பிரியா என்ற ஒன்றரை வயது குழந்தை உள்ளது. இந்த தம்பதிகள் வேலைக்குச் செல்லும்போது, குழந்தையை அருகில் உள்ள வீட்டில் உள்ளவர்களிடம் பார்த்துக்கொள்ளுமாறு விட்டுச் செல்வது வழக்கம்.
வழக்கம் போல் வீட்டிற்கு அருகிலிருப்பவர்களிடம் தங்களது குழந்தையை விட்டுவிட்டு வேலைக்குச் சென்றவர்கள், வேலை முடிந்து வீடு திரும்பும் போது குழந்தையின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலி காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து சங்கிலி காணாமல் போனது குறித்து ஆவடி டேங்க் ஃபேக்டரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரை ஏற்ற காவலர்கள், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கைப்பற்றி விசாரணையை மேற்கொண்டனர். அதில், ஆவடி பக்தவச்சலாபுரத்தைச் சேர்ந்த ரமேஷ்(42), திருவள்ளூர் அருகே வெங்கல் கிராமத்தைச் சேர்ந்த நந்தா(42) ஆகிய ஆட்டோ டிரைவர்கள் குழந்தையை நைஸாகப் பேசி, அழைத்து கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை கழட்டிச் சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து, இருவரையும் கைது செய்த காவலர்கள், அவர்கள் அடகுவைத்திருந்த கடையில் இருந்து தங்கச் சங்கிலியை மீட்டனர். இதன்பிறகு இருவரையும் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வடமாநில இளைஞர் கைது