சென்னை: குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை பொது விநியோகத் திட்ட அரிசி கடத்தலை தடுக்க தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக 13.06.2022 முதல் 19.06.2022 வரையிலான காலகட்டத்தில் வழக்குகள் பதியப்பட்டு, குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது.
குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை மொத்தம் 171 வழக்குகளை பதிவு செய்துள்ளது. அந்த வழக்குகளில் 2,063 குவிண்டால் பொது விநியோகத் திட்ட அரிசி மற்றும் 45 லிட்டர் பொதுவிநியோகத் திட்ட மண்ணெண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 9 சமையல் எரிவாயு உருளைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு ரூ 11,74,620 லட்சம் ஆகும். குற்றங்களில் ஈடுபட்ட 171 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 47 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது.
குறிப்பாக, ஆந்திர பிரதேச மாநில எல்லைகளில் அமைந்துள்ள இத்துறையின் அலகுகளில், 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ 2,65,832 லட்சம் மதிப்பிலான 470.50 குவிண்டால் பொது விநியோகத் திட்ட அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் 9 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 8 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதையடுத்து கர்நாடகா மாநில எல்லைகளில் அமைந்துள்ள இத்துறையின் அலகுகளில், 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ 1,83,738 லட்சம் மதிப்பிலான 325.20 குவிண்டால் பொது விநியோகத் திட்ட அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 8 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 4 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் கேரளா மாநில எல்லைகளில் அமைந்துள்ள இத்துறையின் அலகுகளில், 18 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு ரூ 43,731 மதிப்பிலான 77.4 குவிண்டால் பொதுவிநியோகத் திட்ட அரிசி கைப்பற்றுகை செய்யப்பட்டுள்ளது. இதில் 17 நபர்கள் கைது செய்யப்பட்டு, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 6 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் மனைவியை இம்ப்ரஸ் பண்ண கணவன் செய்த செயல்.. கம்பி என்ன வைத்த கதை...