சென்னை: ஆவடி அடுத்த பட்டாபிராம் பஜார் 3ஆவது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் முருகையன் (68). இவருக்கும் அதே பகுதியில் சுமார் 5 ஆண்டு காலமாக ஏலச்சீட்டு நடத்தி வந்த முருகன் (52) - நிர்மலா (46) தம்பதிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், அந்த தம்பதியிடம் தன் பெயரிலும், மகன் பெயரிலும் 10 லட்சம் ரூபாய் சீட்டு கட்டியுள்ளார். இந்த சீட்டு கடந்த 2015ஆம் ஆண்டு முடிந்த நிலையில், பணத்தை திருப்பி தரவில்லை எனக் கூறப்படுகிறது. அதேபோல அதே பகுதியில் வசிக்கும் 20 பேர்களிடம் பணம் வாங்கி ஏமாற்றியதும் தெரிய வந்தது.
இதுகுறித்து கடந்த 2015ஆம் ஆண்டே, மத்திய குற்றப்பிரிவில் முருகையன் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் சீட்டு மற்றும் கந்துவட்டி பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து, கடந்த ஏழு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த, முருகன் - நிர்மலா தம்பதியை தேடி வந்தனர்.
இந்நிலையில், முருகன் - நிர்மலா தம்பதியை நேற்று முன்தினம் பெங்களூருவில் கைது செய்யப்பட்டனர். அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். அவர்களிடம் முழு விசாரணை நடத்திய பின்னரே பொது மக்களிடம் ஏமாற்றப்பட்ட பணம் என்ன ஆனது என்பது தெரிய வரும் என காவலர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: ஸ்பிளென்டர் மட்டுமே டார்கெட்.. 45 பைக்குகளுடன் சிக்கிய பலே திருடன்!