சென்னை திருமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்குமார் (38). இவருக்கு திருமணமாகி சுடர்மதி என்கின்ற மனைவியும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். தினேஷ்குமார் திருவொற்றியூர் பகுதியில் உள்ள ஒரு ஷோரூமில் வேலை பார்த்து வருகிறார்.
வழக்கம் போல பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது புளியந்தோப்பு பேசன் பிரிட்ஜ் சாலை வழியாக வந்து கொண்டிருந்தபோது திடீரென இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் தினேஷ்குமாரை மடக்கி, தாங்கள் வைத்திருந்த அரிவாளால் ஓங்கி வெட்டியுள்ளனர்.
அப்போது எதிர் திசையில் ரோந்து பணியில் வந்துகொண்டிருந்த பேசின்பிரிட்ஜ் காவல் ஆய்வாளர் புருஷோத்தமன் வண்டியை நிறுத்திவிட்டு அவர்களை நோக்கி ஓடி உள்ளார். இதனைப் பார்த்த அந்த 3 பேரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அவர்களை துரத்திக்கொண்டு ஓடிய காவல் ஆய்வாளர் பேசின் பிரிட்ஜ் ரயில்வே ஸ்டேஷன் அருகே இரண்டு பேரை மடக்கி பிடித்தார்.
மேலும் காயம்பட்ட தினேஷ்குமாரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை செய்தபோது, அவர்கள் அயனாவரம் பகுதியை சேர்ந்த சஞ்சீவ்குமார்(25) மற்றும் அயனாவரம் ரயில்வே குடியிருப்பை சேர்ந்த பிரதீப்குமார் (28) என்பதும் தெரியவந்தது. மேலும் தப்பி ஓடிய நபர் அயனாவரம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின்( 23) என்பது தெரியவந்தது.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல தகவல்கள் வெளிவந்தன. இதில் சஞ்சீவ் குமார் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்புதான் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். வியாசர்பாடியை சேர்ந்த வழக்கறிஞரான ராஜேஷ் என்பவர் சஞ்சீவ் குமார் மற்றும் தப்பியோடிய அஸ்வினுக்கும் வழக்கறிஞராக இருந்து வந்துள்ளார். அப்போது வழக்கறிஞர் ராஜேஷ் தனக்கு தெரிந்த பெண் ஒருவரை, திருவொற்றியூரில் வேலை செய்யும் நபர் ஒருவர் தொடர்ந்து தொல்லை செய்து வருவதாகவும், அவரை கொலை செய்ய வேண்டும் என்று கூறி சஞ்சீவ்குமாரை ஜாமினில் எடுத்துள்ளார்.
சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று பேரும் தினேஷ்குமாரை கொலை செய்வதற்கு ஒத்துக்கொண்டு திருவொற்றியூர் பகுதியிலிருந்து தினேஷ்குமாரை பின்தொடர்ந்து வந்துள்ளனர். பிறகு இவர்கள் தினேஷ்குமாரை வெட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மருத்துவமனையில் இருந்த தினேஷ் குமாரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தியதில், தனது உறவுகார பெண்ணான சுடர்மதியை பெரியோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டதாகவும், அப்பெண்ணிற்கும் உறவினரான ராஜேஷ் என்பவருக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளதாக தெரிவித்தார்.
திருமணத்திற்கு பிறகும் இருவருக்கும் தொடர்பு நீடித்த நிலையில், சுடர்மணிக்கு விலாங்காடு அருகே சொந்தமாக 15 கோடி மதிப்பில் அரசு புறம்போக்கு நிலம் இருப்பதால், அதனை விற்பனை செய்வதற்காக உறவினர் ராஜேஷ் உதவியை நாடியுள்ளனர்.
இது தொடர்பாக ராஜேஷ் வீட்டிற்கு வந்து செல்லும் பொழுது அவர்களுக்குள் மீண்டும் நெருக்கம் அதிகமாகியுள்ளது.
இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் வீட்டில் இருவரும் நெருக்கமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தினேஷ், இது குறித்து தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் சுடர்மணி கோபித்து கொண்டு அவரது அம்மா வீட்டிற்கு பிரிந்து சென்றுள்ளார்.
தினேஷும் திருமங்கலத்தில் உள்ள அவரது அம்மா வீட்டில் இருந்துள்ளார்.
இந்நிலையில் இருவரும் வாழ்ந்து வந்த மூலக்கடை வீட்டில் லீசுக்கு கொடுக்கப்பட்டிருந்த பணத்தை கடந்த இரு தினங்களுக்கு முன்பாக சுடர்மணி, அந்த வீட்டின் உரிமையாளரிடம் கேட்ட பொழுது, கணவரிடம் தருவதாக கூறியுள்ளார். இதனை ராஜேஷிடம் கூறிய பொழுது ராஜேஷ் தினேஷை மிரட்டியதாகவும், அந்த சம்பவம் நடந்த இரண்டு நாள்களில் தன்னை கொலை செய்ய முயன்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அஸ்வின் மற்றும் வழக்கறிஞர் ராஜேஷ் ஆகிய இருவரையும் பேசின் பிரிட்ஜ் காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். துரிதமாக செயல்பட்டு உயிரை காப்பாற்றிய காவல் ஆய்வாளர் புருஷோத்தமன் மற்றும் அவரது குழுவினரை காவல் ஆணையர் வெகுவாக பாராட்டி உள்ளனர்.
இதையும் படிங்க: சென்னையில் இளம்பெண் மருத்துவர் தற்கொலை