தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களைச்சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆந்திர மாநிலம், திருப்பதியில் உள்ள சட்டக்கல்லூரிகளில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த அக்.22ஆம் தேதி தேர்வுக்காக சென்ற இம்மாணவர்கள், தேர்வு எழுதிவிட்டு புத்தூர் அருகே வடமலைப்பேட்டை சுங்கச்சாவடியில் வந்து கொண்டிருந்தனர்.
சுங்கச்சாவடியில் ஏற்பட்ட பிரச்னையில் சுங்கச்சாவடி ஊழியர்கள் மற்றும் ஆந்திராவைச்சேர்ந்த சிலர் ஒன்றிணைந்து தமிழ்நாடு மாணவர்களை சரமாரியாகத் தாக்கினர். அங்கு ஆந்திர காவல் துறையினர் இருந்தும் கண்டுகொள்ளாமல் ஆந்திராவைச்சேர்ந்தவர்களுக்கு சாதகமாக செயல்பட்டனர்.
இதில், தமிழ்நாடு மாணவர்களின் கார், இரு சக்கர வாகனங்கள் அடித்து உடைக்கப்பட்டு, சிலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றனர்.
இந்தநிலையில் ஆந்திரா மாநிலம், புத்தூர் அருகே கடந்த 22ஆம் தேதியன்று சுங்கச்சாவடியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் சமூக நீதிக்கான வழக்கறிஞர்கள் சங்கம் தலைவர் L. K.சார்லஸ் அலெக்சாண்டர் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
அந்தப்புகாரின் அடிப்படையில் நேற்று (நவ.1) வழக்காகப் பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்நிலையில், விசாரணையில் ஆந்திர மாநில காவல்துறைத்தலைவர் இந்தக் கொடூர தாக்குதலை விசாரித்து அறிக்கைத்தாக்கல் செய்ய தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆந்திர சுங்கச்சாவடி ஊழியர்களும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவர்களும் மோதல்