இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், “வெப்பச்சலனம் காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன்கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
நீலகிரி, கோவை, தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று, இடியுடன்கூடிய கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பொழிய வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவுப்படி மதுரை மாவட்டத்தில் அதிகபட்சமாக 12 சென்டி மீட்டர் மழையும், தஞ்சாவூரில் 7 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் திருத்தணியில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் உருவாகக்கூடும்.
வெப்பச்சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பு உள்ளது. நகரின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகும். குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஆகும். குமரிக்கடல், லட்சத்தீவு, மாலத்தீவை ஒட்டிய பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வரை வீசக்கூடும் என்பதனால் அடுத்த 48 மணி நேரத்திற்கு மீனவர்கள் இப்பகுதிகளில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அதே போல் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு மத்திய அரபிக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால் மே 31ஆம் தேதி முதல் ஜூன் 5ஆம் தேதி வரை மீனவர்கள் அரபிக் கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக்கூடும் என்பதால், அடுத்துவரும் தினங்களுக்கு விவசாயிகள், பொதுமக்கள் முற்பகல் 11:30 முதல் பிற்பகல் 03:30 வரை திறந்தவெளியில் வேலைசெய்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அந்தமான் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி வரும் 30ஆம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவாகக் கூடும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : ஊரடங்கால் மக்கள் பாதிப்பு: உதவக்கோரி ஆட்சியரிடம் மனு அளித்த திமுக!