சென்னை திருவல்லிக்கேணி அயோத்தி நபர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (62). இவர் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் கடந்த 10ஆம் தேதி திருவல்லிக்கேணி துளசிங்க பெருமாள் கோயில் தெருவில் உள்ள ஸ்டேட் வங்கி ஏடிஎம் மையத்திற்கு பணம் எடுக்கச் சென்றுள்ளார்.
அப்போது, ஏடிஎம் மையத்திற்குள் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் ராஜேந்திரன் பின்புறம் நின்றுள்ளார். ராஜேந்திரன் பணம் எடுக்க திணறியபோது, அந்த அடையாளம் தெரியாத நபர் உதவுவதாகக் கூறி ஏடிஎம் கார்டை வாங்கியுள்ளார்.
பின்னர், பணம் எடுத்துவிட்டு ராஜேந்திரனிடம் வேறு ஏடிஎம் கார்டை கொடுத்துள்ளார். இதனையறியாத ராஜேந்திரன் ஏடிஎம் கார்டை வாங்கிச் சென்றுள்ளார். இந்நிலையில், கடந்த மூன்று நாள்களில் ராஜேந்திரன் வங்கி கணக்கிலிருந்து சுமார் 1 லட்சத்து 13 ஆயிரம் ரூபாயை அந்த அடையாளம் தெரியாத நபர் எடுத்துள்ளார்.
ஆனால், ராஜேந்திரனுக்கு வரும் குறுஞ்செய்தியை அவர் கவனிக்கவில்லை. இதையடுத்து இன்று பணம் எடுக்க ஏடிஎம் மையத்திற்குச் சென்ற அவர் ஏடிஎம் கார்டு மாறியிருப்பதைக் கண்டுள்ளார். பின்னர் வங்கி கணக்கை சோதனை செய்தபோது 1 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் வரை காணாமல் போயிருப்பதை தெரியவந்தது.
உடனே ராஜேந்திரன் இச்சம்பவம் குறித்து ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்புக் கேமரா மூலம் குற்றவாளியைத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: அரசு டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து திருடமுயற்சி