சென்னை: அறிமுக இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள லத்தி திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் நடைபெற்றது. இதில் விஷால், இயக்குனர் வினோத்குமார், ரமணா, நந்தா மற்றும் சிறப்பு விருந்தினராக இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஜாங்கிட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். லத்தி படத்தின் தமிழ் டிரைலரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார்.
ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஜாங்கிட்,”காவல்துறையில் டிஜிபி முதலிலும் கடைசியில் கான்ஸ்டபிள் வரும். நடிகர்கள் பெரும்பாலும் அதிகாரியாக தான் நடிக்கிறார்கள். யாரும் கடை நிலையில் உள்ளவர்கள் குறித்து நடிப்பது இல்லை. கான்ஸ்டபிள் தான் கடை நிலையில் இருப்பது. காவல்துறைக்கு நல்ல பெயர் கிடைப்பதும் கெட்ட பெயர் கிடைப்பதும் கான்ஸ்டபிள் கையில் தான் உள்ளது. அவர் மக்களிடம் நடந்து கொள்வதை பொறுத்து தான் அது கிடைக்கும். ஆனால் அவர்களின் வாழ்க்கை மிகவும் கடினமானது.
நிறைய போலீஸ் கை, கால்கள் இழந்து உள்ளனர். வாரண்ட் கொடுக்க சென்ற ஒரு போலீசுக்கு கை போய் விட்டது. நாங்கள் பெரிய அதிகாரிகள் எங்களுக்கு எல்லா வசதிகளும் இருக்கும். பெரிய துப்பாக்கிகள் இருக்கும். ஆனால் அவர்களுக்கு அது கிடையாது. சத்யம் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்தார். தற்போது கான்ஸ்டபிளாக நடித்துள்ளார். காவல்துறை சார்பில் அவருக்கு நான் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
8 வருடங்களுக்கு முன்பு இயக்குனர் எச்.வினோத் என்னிடம் வந்தார், ஒரு படம் பண்ண போகிறேன் கதை வேண்டும் என்றார். நான் எனது கணினியிலிருந்த கதையை அவருக்கு கொடுத்தேன். அவர் தீரன் அதிகாரம் ஒன்று படத்தை எடுத்தார். தற்போது இன்னொரு வினோத் இந்த படத்தை எடுத்துள்ளார். இரண்டு வினோத், காவல்துறைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ்,”நான் தீரன் படம் பார்த்ததில் இருந்து ஜாங்கிட் அவர்களின் தீவிர ரசிகன். உங்களுடைய எல்லா இன்டர்வியூக்களையும் பார்த்து விடுவேன். ஆக்சன் படங்கள் எனக்கு பிடிக்கும். அதுவும் raw ஆக இருந்தால் முதல் நாள் முதல் காட்சி சென்று பார்ப்பேன். எல்லாமே பாசிட்டிவ் ஆக உள்ளது. நானும் இந்த படத்திற்காக எதிர்ப்பார்த்து கொண்டு உள்ளேன். யுவன் சங்கர் ராஜா வருவார் அவருடன் பேசுவேன் என எதிர்பார்த்து கொண்டு இருந்தேன். படக்குழு அனைவருக்கும் வாழ்த்துகள்” என்றார்.
நடிகர் விஷால்,”இந்த மேடையில் ஒரு கான்ஸ்டபிளாக உங்களுக்கு ஒரு சல்யூட் அடித்து கொள்கிறேன். ஜாங்கிட் அவர்களின் வாழ்க்கையில் உள்ளதை பார்த்தால் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு 4 கதைகள் கிடைக்கும். மற்ற இயக்குனர்களுக்கும் கதைகள் கிடைக்கும்.
எனக்கு ரொம்ப சந்தோஷமாக உள்ளது. ஒரு வகையில் பொறாமையாக உள்ளது விஜய்யை வைத்து படம் இயக்குகிறீர்கள். கடவுள் அருள் இருந்தால் நானும் விஜய்யை வைத்து படம் இயக்குவேன். நானும் ஒரு இயக்குனராக விஜய்யை வைத்து படம் இயக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை.
18 வருஷத்தில் எனக்கு எவ்வளவு அடி பட்டதோ அந்த அளவிற்கு இந்த ஒரு படத்தில் பட்டது. என் கை எல்லாம் மிஷின் கை போல உள்ளது. அதனால் தான் முழு கை சட்டை அணிந்து வந்தேன். முழுமை பெறாத ஒரு கட்டிடத்தில் தான் இந்த படப்பிடிப்பு நடைபெற்றது. அங்கு என்ன இருக்கிறது என்று தெரியாமல் தான் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்த படம் வெளியான பிறகு யுவன் சங்கர் ராஜா பின்னணி இசை அதிகம் பேசப்படும். பீட்டர் மாஸ்டர் ஸ்டண்ட் காட்சிகள் பேசப்படும்.
எனக்கு கதை யாராவது சிபாரிசு செய்தால் அந்த கதை சரியாக இல்லை என்றால் அவர்களை உள்ளே அறைக்குள் அழைத்து நெங்கு நெங்கு என்று அடிப்பேன். கதை சிறப்பாக இருந்தால் கட்டி அணைப்பேன். கதை சரியாக இருந்தால் 4வது மாடி அல்ல 8வது மாடியில் இருந்து கூட குதிப்பேன். மேலும் விஷால் பேசி கொண்டு இருந்த போது ரசிகர்கள் ஒருவர் புரட்சி தளபதி என்று கத்தினார். அத்ற்கு விஷால் புரட்சி தளபதி கிடையாது என் பெயர் விஷால் அவ்வளவு தான்” என்றார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில்,”தளபதி 67 படம் குறித்து தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். தற்போது தளபதி 67 தொடர்பாக எதையும் சொல்ல முடியாது. ஜனவரி மாதம் தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.வாரிசு திரைப்படம் வெளியான பிறகு தான் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது. அஜித்தின் சில்லா சில்லா பாடல் சிறப்பாக உள்ளது. தீ தளபதி பாடல் பெரிய திரையில் பார்த்தேன் சிறப்பாக இருந்தது” என்றார்.
இதையும் படிங்க: பணமோசடி: ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீது நோரா ஃபதேஹி அவதூறு வழக்கு!