சென்னை: சென்னை வளர்ச்சி ஆராய்ச்சிக் கழகத்தில் (எம்ஐடிஎஸ்) துணைப் பேராசிரியராக பணிபுரிபவர் சி.லட்சுமணன். இவர் அங்கு நடைபெறும் முறைகேடுகளை நிறுத்தக்கோரி கல்லூரி வளாகத்தில் நேற்று (அக்.25) உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
இது குறித்து அவர் ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில், "சென்னை வளர்ச்சி ஆராய்ச்சிக் கழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக முறைப்படி எதுவும் நடக்கவில்லை. இதற்கான சட்ட திட்டங்களை சரியாகப் பின்பற்றவில்லை. இந்நிறுவனம் சமூக நீதி, பொருளாதார வளர்ச்சி உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து வெளியிடுவது வழக்கம்.
இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அலுவலர் செந்தில் உள்ளிட்டோர் கொண்ட குழு மூலம் ஆய்வு செய்ய சென்னை வளர்ச்சி ஆராய்ச்சிக் கழக இயக்குனருக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டது.
ஆனால் அவர் எந்த பதிலும் தராமல் இருந்தார். நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை. தொடர்ச்சியாக பல்வேறு முறைகேடுகள் இருந்த காரணத்தால் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த வேண்டிய சூழல் உருவானது. இதன் தொடர்ச்சியாக, பேராசிரியர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
கோரிக்கைகள்
அநீதியின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, அனைத்து ஊழியர்களையும் நியாயமாகவும் சமமாகவும் நடத்த வேண்டும். கோவிட் 19 தொற்று உச்சக்கட்டத்தில் இருந்தபோது அசோக் சந்திரனின் ஒப்பந்தத்தை நீட்டிக்காதது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். ஆட்சிமன்றக் குழுவில் உதவி மற்றும் இணைப் பேராசிரியர்கள் சேர்க்கப்பட வேண்டும். நியாயமான நிர்வாகத்திற்கான குழு அமைப்பை மீட்டெடுக்க வேண்டும்.
மாதாந்திர ஆசிரியர் கூட்டங்களை இயக்குநரின் விருப்பத்திற்கு விட்டுவிடாமல், விதிமுறைகளைப் பின்பற்றி நடத்துவதை கட்டாயமாக்க வேண்டும். பொன்விழா கொண்டாட்டக் குழுவை மறுசீரமைக்க வேண்டும். ஊழியர்களின் குறைத் தீர்க்கும் குழுவை அமைக்க வேண்டும். கழகத்தின் உள்கட்டமைப்பை புனரமைப்பதற்கான உறுதியான திட்டங்களைத் தொடங்க வேண்டும். சுழற்சி அடிப்படையில் இயக்குநரின் பொறுப்பை பகிர்ந்து கொள்ளும் வகையில் ஆசிரியர் விதியை திருத்தம் செய்ய வேண்டும்.
பட்டியலினத்தவர் புறக்கணிப்பு
இந்த நிறுவனத்தில் 10 முதல் 15 ஆண்டுகள் பணிபுரிந்த பட்டியலினத்தை சேர்ந்த பெண், கணக்காளர் நிதி அலுவலர் பதவிக்கு விண்ணப்பித்தார். ஆனால் அவர் புறக்கணிக்கப்பட்டார். அதனால் அப்பெண் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார்" என்றார்.
முன்னதாக இவரது கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்படும் என்று அந்நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, தனது உண்ணாவிரதப் போராட்டத்தை லட்சுமணன் நிறுத்திக் கொண்டார்.
இதையும் படிங்க: கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு புதிய ரேஷன் அட்டை - தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல்