சென்னை: தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ''ஆளுநருக்கு உரிய மரியாதை கொடுக்கும் வகையில் அவருடைய செயல்பாடுகளில் மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும், ஆளுநர் உரையை நடத்தும்போது எந்தவித எதிர்ப்பையும் நாங்கள் தெரிவிக்காமல் இருந்தோம். ஜனநாயக ரீதியில் ஆளுநருக்குரிய மரியாதையே அரசின் சார்பில் தந்துள்ளோம் எனத் தெரிவித்தார்.
மேலும் ஆளுநர் உரையை வாசிக்கும் போது, நடைமுறைக்கு மாறாக சட்ட விதிகளுக்கு மாறாக அவைகளை மீறக்கூடிய வகையில் அரசியலமைப்பின் விதிகளுக்கு முற்றிலும் முரணான வகையில் ஆளுநர் இன்றைக்கு உரையினை வாசித்துள்ளது மிகவும் வருத்தம் அளிக்கிறது. அம்பேத்கருடைய பேரைக் கூட உச்சரிக்காமல் ஆளுநர் புறக்கணித்துள்ளார் என்று குறிப்பிட்டார்.
இன்றைய ஆளுநர் உரையை தவிர்த்து, அரசு உடைய கொள்கைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சமூக நீதி, சமத்துவம், பெண்ணடிமை ஒழிப்பு, மத நல்லிணக்கம் உள்ளடக்கிய வளர்ச்சிகளை எல்லாம் மேற்கொள்ளகூடிய வார்த்தைகளை ஆளுநர் உரையில் தவிர்த்து உள்ளார்.
தேசிய கீதம் பாடி முடிப்பதற்கு முன்பாகவே அதிமுகவினர் வெளியேறி, அவை மரபுகளை மீறிய முறையில் செயல்பட்டுள்ளனர். ஆளுநர் தேசிய கீதத்தை புறக்கணித்துள்ளார். அரசியலமைப்புக்கு எதிராக ஆளுநர் செயல்பட்டுள்ளார். ஆளுநர் வாசிக்க வேண்டிய உரை 5-ம் தேதி முதலமைச்சர் ஒப்புதல் அளித்து 5-ம் தேதி ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ளது. 7-ம் தேதி ஆளுநர் உரையை ஒப்புதல் அளித்துள்ளார். அதற்கான ஆதாரம் அளிக்கப்பட்டுள்ளது. அரசியல் கொள்கை வேறு, ஆளுநர் சட்டமன்றத்தின் அரசின் கொள்கைக்கு மாறாக செயல்படுவது ஏற்புடையது அல்ல'' என அவர் தெரிவித்தார்.
ஆளும் கட்சி நாடகத்தை நடத்தியுள்ளது: பின் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், ''ஆளும் கட்சியும் அவர்களுடன் கூட்டணியில் உள்ள கட்சிகளும் கேவலமான நாடகத்தை சட்டமன்றத்தில் அரங்கேற்றி உள்ளன. அரசின் நிர்வாகத் திறன் இன்மை, லஞ்சம் மற்றும் வாரிசு அரசியல் குறித்து மக்கள் மத்தியில் இருக்கும் எதிர்ப்பை மறைப்பதற்கு இன்று ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராகப் போராட்டம் நடத்தி, திமுகவின் கூட்டணிக்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
இந்த அரசாங்கத்தின் திட்டம் மற்றும் கொள்கையினை ஆளுநர் படிப்பது மரபு. ஆனால், ஆளுங்கட்சியின் சித்தாந்தத்தின் ஊதுகோளாக ஆளுநர் இருக்க வேண்டும் என இந்த அரசு நினைக்கிறது. இதற்கான அரசியல் களமாக சட்டமன்றத்தை மாற்றியுள்ளனர். இது மாநிலத்தின் வளர்ச்சிக்கு பயன் அளிக்காது. இதனை பாஜக கண்டிக்கிறது. நீட் விவகாரத்தில் ஆளுநர் கேட்டதை அரசு பொதுவெளியில் ஏன் சொல்ல மறுக்கிறது? சட்டப்பேரவையில் ஆளுநரை அழைத்து அசிங்கப்படுத்தி உள்ளனர். இதுதான் ஜனநாயக மரபா?'' என கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: 'திராவிட மாடல்' வார்த்தை தவிர்ப்பு.. சட்டப்பேரவையில் பாதியில் வெளியேறிய ஆளுநர்