சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது பேசிய தளி சட்டப்பேரவைத் தொகுதி திமுக உறுப்பினர் பிரகாஷ், ‘கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மருத்துவர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும். கிருஷ்ணகிரியில் டெங்கு காய்ச்சல் பரவிவருகிறது. காய்ச்சல் காரணமாக ஒருவர் இறந்துள்ளார். இதனை தடுப்பதற்கு அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?’ என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர், கிருஷ்ணகிரி மாவட்டத்தைப் பொறுத்தவரை அனைத்து மருத்துவமனைகளிலும் 100 விழுக்காடு மருத்துவர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், இந்த ஆண்டு தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் இதுவரை ஒரு இறப்பு கூட நிகழவில்லை எனத் தெரிவித்துள்ளார்.