சென்னை: சென்னை கொடுங்கையூரில் கடந்த ஜன.14ஆம் தேதி வியாசர்பாடியைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் அப்துல் ரஹீம் முகக்கவசம் அணியாமல் சென்றதாக கூறி காவல்துறையினரால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக கொடுங்கையூர் காவல் நிலைய ஆய்வாளர் நசீமா, காவலர்கள் உத்திரகுமார், ஹேமநாதன், சத்தியராஜ், ராமலிங்கம், அந்தோணி, தலைமை காவலர் பூமிநாதன் உள்பட ஒன்பது காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மேலும் காவல் நிலையத்தில் வைத்து சட்டக்கல்லூரி மாணவர் தாக்கப்பட்டதால், வழக்கை வடக்கு மண்டல வருவாய் கோட்டாட்சியர் விசாரித்து 15 நாளில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
மாவட்ட ஆட்சியரின் உத்தரவை தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர் கண்ணப்பன் இந்த வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். பாதிக்கப்பட்ட சட்டக்கல்லூரி மாணவர் அப்துல் ரஹீமிடம் கோட்டாட்சியர் விசாரணை முடிவடைந்த நிலையில், தண்டையார்பேட்டை தாசில்தாரர் அலுவலகத்தில் வழக்கில் தொடர்புடைய காவலர்களிடம் கண்ணப்பன் விசாரணை மேற்கொண்டார்.
காவல் ஆய்வாளர் நசீமா உள்பட ஒன்பது காவலர்களும் விசாரணைக்காக ஆஜராகினர். இன்று (ஜன.27) மாலை வரை மூன்று காவலர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் நாளையும் (ஜன.28) விசாரணை நடத்தப்படும் என அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு: காவல் ஆணையரிடம் திராவிடர் கழகம் புகார்