தமிழ்நாட்டில் கடந்த 7ஆம் தேதி சென்னை காவல் எல்லைக்குள்பட்ட பகுதிகள் தவிர மற்ற இடங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. ஊரடங்கு உத்தரவால் மூடிக்கிடந்த மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால், தகுந்த இடைவெளி, கட்டுப்படுத்த முடியாத கூட்டத்தால் மேலும் கரோனா பாதிப்பு ஏற்படும் என்ற அச்சமும் எழுந்தது.
மதுபானக் கடைகளை மூடக்கோரி பல்வேறு எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் மதுக்கடைகளை மூடுமாறு உத்தரவிட்டுள்ளது. மேலும், ஆன்லைன் மூலம் மதுவை வழங்க அனுமதியளித்துள்ளது.
ஊரடங்கு முடியும் வரை மதுபானக் கடைகளை திறக்க வேண்டாம் என்று தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது. இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்ட டாஸ்மாக் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மதுக்கடைகள் மூடி சீல் வைக்கப்படும் என்றும் ஊரடங்கு முடியும்வரை மதுக்கடைகள் திறக்கப்படாது" என்றும் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகளும் - அரசுக்கு வருவாய் இழப்பும்!