சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சரக்கு வாகன தயாரிப்பு நிறுவனமான அசோக் லேலண்ட் நிறுவனம் பிஎஸ்-6 ரக வாகன விற்பனைக்கு தயாராகியுள்ளது.
புதிய சரக்கு வாகன விற்பனையில் வாடிக்கையாளர்களுக்கு கடன் சேவை வழங்கும் வகையில் அசோக் லேலண்ட் நிறுவனம் ஆக்சிஸ் வங்கியுடன் இணைந்துள்ளது. இதற்காக இரு நிறுவனங்களுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களிடம் பணப்புழக்கம் குறைந்துள்ளதால், போதிய நிதி சேவை கிடைப்பதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால், வாடிக்கையாளர்கள் வாகனங்களை எளிதில் வாங்கும் வகையில் கடன் சேவைக்கு அசோக் லேலண்ட் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
இது தொடர்பாக பேசிய அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைமை இயக்க அலுவலர் (Chief operating officer) அனுஜ் கத்தூரியா, "ஆக்சிஸ் வங்கியுடன் செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் எங்கள் வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கும் வசதியை வழங்க முடியும். இதன்மூலம் எங்கள் நிறுவனத்திற்கும் ஆக்சிஸ் வங்கிக்கும் கூட்டாக பலன் கிடைக்கும். அசோக் லேலண்ட் நிறுவனத்தின் சரக்கு வாகனங்கள் தொழில்நுட்ப ரீதியாக மிகவும் முற்போக்கானது," என்றார்.