சென்னை: சென்னையில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “டெங்கு, மலேரியா, கொரோனாவை போல் சனாதனமும் ஒழிக்கப்பட வேண்டியது” எனப் பேசியதையடுத்து அரசியல் ரீதியாகப் பல சர்ச்சைகள் எழுந்தது.
இந்நிலையில், சனாதனம் ஒழிப்பு குறித்துப் பேசியதாக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு மற்றும் திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோர் எந்த தகுதியின் அடிப்படையில் பதவியில் நீடிக்கிறார்கள் என விளக்கமளிக்க உத்தரவிடக் கோரி, இவர்களுக்கு எதிராக இந்து முன்னணி நிர்வாகிகள் கோ-வாரண்டோ (Quo Warranto) வழக்கு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் முன்பு நேற்று (நவ.10) விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக எம்.பி. ராசா தரப்பில் மூத்த வழக்கறிஞர் விடுதலை, ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். அப்போது அவர், “வரையறுக்கப்படாத காரணங்களைக் கூறி ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக கோ-வாரண்டோ உத்தரவு பிறப்பிக்கக் கோருவது அரசியல் சாசனத்தைத் திருத்தி எழுதவும், அரசியல் சாசனத்தின் அடிப்படை தன்மைக்கு எதிரானதாகவும் அமையும். ஆகவே, இந்த மனு ஏற்கத்தக்கதல்ல” என்றார்.
மேலும், “இத்தகைய கோ-வாரண்டோ உத்தரவைப் பிறப்பிக்க நீதிமன்றத்திற்கும், நிர்வாகத்திற்கும் இடையிலான அதிகார பகிர்வு, கோட்பாடு அனுமதிக்கவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரைத் தகுதி நீக்கம் செய்ய புதிய நிபந்தனையைச் சேர்க்கவும், இந்த கோட்பாடு அனுமதிக்கவில்லை” என வாதிட்டார்.
பின், “மதத்தைப் பின்பற்றுவதற்கான அரசியல் சாசன உரிமையைவிட, உயர்ந்ததாகப் பேச்சு மற்றும் கருத்துரிமை அமைந்துள்ளது. அருவெறுக்க தக்க மத நடைமுறைகளை விமர்சனம் செய்யவும், இந்த உரிமை வகை செய்கிறது. சனாதன தர்மத்தில் உள்ள சமூக நீதிக்கு எதிரான விரும்பத்தகாத அம்சங்கள் குறித்தும் கருத்து தெரிவிக்க நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் தனக்கு உரிமை உள்ளது” எனவும் ஆ.ராசா தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து வாதங்கள் நிறைவடையாத நிலையில் வழக்கின் விசாரணையை நவம்பர் 24ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
இதையும் படிங்க: சென்னையில் இருந்து சிங்கப்பூருக்குக் கடத்த முயன்ற ரூ.10 லட்சம் மதிப்புடைய சுறா மீன் துடுப்புகள் பறிமுதல்!