சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிக்கை சமர்பிக்கப்பட்டது. அதில் பல்வேறு முக்கிய பரிந்துரைகளும் வழங்கப்பட்டிருந்தன. ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து இடைக்கால முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்பட்டார். 2 மாதங்களே முதலமைச்சராக இருந்த ஓபிஎஸ், சில காரணங்களால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அதன்பின் ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிகள் என்று அதிமுக இரண்டாகப் பிரிந்தது.
பின்னர் மீண்டும் அணிகள் இணைந்தபோது, ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தினார். அதன் அடிப்படையில் முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. அப்போது அனைத்து தரப்பினரையும் இந்த ஆணையம் விசாரணை செய்தது.
அதில் ஓபிஎஸை விசாரணைக்கு அழைப்பதற்காக 6 முறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் ஓபிஎஸ் ஆஜராகவில்லை. பின்னர் ஒரு வழியாக ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரான ஓபிஎஸ், "ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருக்கும்போது நான் பார்க்கவில்லை.
சசிகலா, அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அப்போதைய சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் கேட்டுதான் தெரிந்து கொள்வேன். அவர்கள் ஜெயலலிதாவுக்கு இதய கோளாறு ஏற்பட்டுள்ளதாக கூறினர். ஜெயலலிதா மரணத்தில் எனக்கு எந்த வித சந்தேகமும் இல்லை" என தெரிவித்தார்.
அதனடிப்படையில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஓபிஎஸ் வாக்குமூலத்தின்படி ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அவருக்கு தெரிவிக்கப்படவில்லை என்பது தெளிவாகிறது. சசிகலாவைப் பார்த்து உடல்நிலை குறித்து கேட்கும்போது, அனைத்தும் சரியாக நடப்பதாக ஓபிஎஸ்சிடம் சசிகலா கூறியுள்ளார்.
மருத்துவமனையில் என்ன நடக்கிறது என்று தெரிந்த போதிலும், அவருக்கு எதுவும் தெரிவிக்காத போதிலும் அவரும் மற்ற அமைச்சர்களும் பொறுமை காத்து இருந்தனர். ஓபிஎஸ்சின் பதவியை மற்றொரு பிரிவு பறித்தபோது 'தர்மயுத்தம்' என்ற ஒரு அத்தியாயத்தை அவர் முன் வைத்தார்" என்று தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: சசிகலாவை குற்றம் சாட்டும் ஆணையம் - ஓ.பி.எஸ். இணைப்பு சாத்தியமா?