சென்னை: ஆருத்ரா கோல்டு டிரேடிங் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிறுவன இயக்குநரிடம் போலீஸ் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனம், அதிக வட்டி தருவதாகக் கூறி முதலீட்டாளர்களிடம் இருந்து 2,400 கோடி ரூபாய் பெற்று மோசடியில் ஈடுபட்டது. இந்த மோசடி தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து இயக்குநர் மைக்கேல் ராஜ், பாஜக நிர்வாகி ஹரிஷ் உட்பட 11 பேரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அனைவரையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்து வருகின்றனர். அந்த வகையில் துபாய் நாட்டிற்கு தப்ப முயன்றபோது பிடிபட்ட நிறுவனத்தின் இயக்குநரில் ஒருவரான மைக்கேல் ராஜிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஏழு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் மைக்கேல் ராஜ் பல திடுக்கிடும் தகவல்களைத் தெரிவித்துள்ளார். குறிப்பாக மைக்கேல் ராஜ் ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் அனைத்து கிளைகளின் வங்கி கணக்குகளையும் கையாண்டது விசாரணையில் தெரியவந்தது. முதலீட்டாளர்களிடமிருந்து பெற்ற சுமார் 1,749 கோடி ரூபாயை பல்வேறு வங்கி கணக்குகளுக்கு பரிவர்த்தனை செய்ததாக மைக்கேல் ராஜ் ஒப்புக்கொண்டு உள்ளார்.
மேலும் முதலீட்டாளர்களிடம் மோசடி செய்த பணத்தில் மைக்கேல் ராஜ் 25 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களை வாங்கி குவித்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் முக்கிய இயக்குநர்கள் வெளிநாடுகளில் எங்கு தலைமறைவாக உள்ளனர் என்பது குறித்தும் தகவல் தெரிவித்துள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். போலீஸ் விசாரணைக்கு பின்னர் மைக்கேல் ராஜை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மைக்கேல் ராஜ் 1,749 கோடி ரூபாய் பணத்தை எந்தெந்த வங்கிக் கணக்கிற்கு பணப்பரிமாற்றம் செய்துள்ளார் என அவற்றின் பட்டியலை தயாரித்து அவர்களிடமும் விசாரணை நடத்த உள்ளதாகவும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் பாஜகவில் பொறுப்பு பெறுவதற்காக இயக்குநரில் ஒருவரான ஹரிஷ் மோசடி செய்த பணத்தை பல பாஜக பிரமுகர்களுக்கு கொடுத்து, பதவி பெற்றதாக வாக்குமூலம் அளித்த தகவலின் அடிப்படையில், பாஜக பிரமுகர்களான அலெக்ஸ் மற்றும் சுதாகர் ஆகியோருக்கு நேற்று சம்மன் கொடுத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பாஜக பிரமுகர் சுதாகருக்கும், இயக்குநர் ஹரிஷுக்கும் இடையே பணம் பரிவர்த்தனை நடந்திருப்பதை சுதாகரும் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் பணம் வாங்கியது ஏன் என்பது குறித்து மீண்டும் பாஜக பிரமுகர் சுதாகரை அழைத்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். மேலும் துபாய் நாட்டில் உள்ள நடிகர் ஆர்.கே சுரேஷிற்கு பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகவில்லை எனப் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இவ்விவகாரத்தில் பாஜகவைச் சேர்ந்த பலர் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: "திமுக கோப்புகள்" - அண்ணாமலை அதிரடி ட்வீட்.. வாட்ச் பில் இடம்பெறுமா..?