சென்னை: கடந்த ஐந்து ஆண்டுகளாக உதகமண்டலம் அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை பி.எஸ்சி வனவிலங்கு உயிரியல் (B.Sc- Wildlife Biology) படிக்க ஆர்வத்துடன் சேர்ந்த மாணவர்களுடைய சான்றிதழ்களில் விலங்கியல் (வனஉயிரின உயிரியல்) Zoology (wildlife biology) எனக் குறிப்பிடப்பட்டுள்ளதால் மாணவர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
ஈடிவி பாரத்துக்கு கிடைத்த பிரத்யேக ஆவணப்படி, 2012-13ஆம் ஆண்டு வழங்கப்பட்ட அரசாணையின் படி (அரசாணை நிலை எண்: 98, உயர்கல்வி (ஜி1) துறை 2012-13ஆம் ஆண்டு கல்வியாண்டில் மூன்று ஆண்டுகள் கொண்ட வனவிலங்கு உயிரியல் என்ற தனிப்பாடப்பிரிவு தொடங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், உதகை அரசு கலைக் கல்லூரி மற்றும் பாரதியார் பல்கலைக்கழகமும் அரசாணைக்கு மாறாக இந்த பாடப்பிரிவினை விலங்கியல் (வனஉயிரின உயிரியல்) என மாற்றியுள்ளது.
இதனால் வனத்துறையில் பணிகளில் மற்றும் வனவிலங்கு ஆராய்ச்சி மேற்கொள்ள விரும்பும் மாணவர்களின் கனவுகள் பகல் கனவாக மாறியுள்ளது. அரசு கலைக் கல்லூரி உதகமண்டலம் (கல்லூரி எண் 1021002) 1955ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இந்த கல்லூரி கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரியாகும். 2013ஆம் ஆண்டு இளங்கலை வனவிலங்கு உயிரியல் என்ற பாடப்பிரிவு இந்தியாவிலேயே முதன்முதலில் இந்த கல்லூரியில் தான் தொடங்கப்பட்டது.
2005ஆம் ஆண்டு முதுகலை வனவிலங்கு உயிரியல் என்ற பாடப்பிரிவு சுயநிதி பாடப்பிரிவாக தொடங்கப்பட்டு பிறகு 2011ஆம் ஆண்டு முறையான பாடப்பிரிவுகளாக மாற்ற அரசாணை வெளியிடப்பட்டது. மேலும் இந்த கல்லூரி வனம் நிறைந்த மலைப்பிரதேசத்தில் அமைந்துள்ளதால் வன உயிரியல் என்ற தனிப் பாடப்பிரிவினை 2012-13ஆம் ஆண்டு கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதனால் வன விலங்குகள் மற்றும் வன ஆராய்ச்சியில் விருப்பமுள்ள மாணவர்கள் இந்த பாடப்பிரிவை கொண்டு பட்டதாரியாகலாம் என கருதப்பட்டது. ஆயினும் இந்த பாடப்பிரிவு தனியாக இல்லாமல் விலங்கியலை இணைத்து சான்றிதழ் வழங்கப்படுவதால் மாணவர்கள் எந்த ஒரு குறிப்பிட்ட பணிக்கு விண்ணப்பிக்க இயலாமல் தடுமாற்றம் அடைந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து சமூக ஆர்வலர் மற்றும் ஒருங்கிணைந்த பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் விஜய் கிருஷ்ணராஜ் கூறுகையில், "இந்த கல்லூரி அரசாணையை புறக்கணித்ததால், ஏற்கெனவே விலங்கியல் படித்த சுமார் 400 மாணவர்களின் வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மாணவர்கள் வனத்துறையில் பணியாற்ற முடியாமல் வேறு தொழிலுக்கு சென்று விட்டனர்" எனத் தெரிவித்தார்.
மேலும் அவர், ‘’ பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மறுபடியும் 'வன உயிரியல்' என்ற சான்றிதழை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக, முதலமைச்சர் ஸ்டாலின், உயர் கல்வித்துறை அமைச்சரும் இந்த விவகாரத்தில் தலையிட்டு உடனடியாக இந்த 'வனஉயிரியல்' என்ற தனிப்பாடப்பிரிவை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அரசாணையை அமல்படுத்த தவறிய கல்லூரி மற்றும் பல்கலைக்கழக நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய கல்லூரியில் பயின்ற மாணவர் ஒருவர் "இந்த அரசாணையை புறக்கணித்ததன் மூலம், இந்தியாவிலேயே தனிப்பாடப்பிரிவு கொண்ட ஒரு பட்டப்படிப்பினை இழந்துவிட்டோம். இரண்டாவதாக, இந்திய வனப்பணியின் (IFS) பிரதான தேர்வு எழுதும்போது விருப்பப் பாடமாக இந்த இளங்கலை வனவிலங்கு உயிரியல் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. ஆனால், இந்த பட்டப்படிப்பின் பெயர் மாற்றப்பட்டுள்ளதால் அதற்கான வாய்ப்பு உதகை அரசு கலைக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு கிடைக்கப்பெறவில்லை. அரசின் வணப்பணிகளில் முன்னுரிமையும் கோரப்பட முடியவில்லை" என்றார்.
மேலும், “தமிழ்நாடு அரசு இதனை பரிசீலித்து அரசாணைப்படி இந்த தனிப்பாடப்பிரிவினை நடத்துமாறும், உதகை போன்ற மலை மாவட்டங்களை சேர்ந்த பின்தங்கிய மாணவர்கள் இந்த பாடப்பிரினை படித்தால் வனத்துறையில் வழங்கப்படும் பணிகளில் முன்னுரிமை வழங்கப்படும். இதனால் எதிர்வரும் காலங்களில் நீலகிரி போன்ற மலை மாவட்டங்களில் பயின்று வரும் மாணவர்கள் பயன் பெறுவார்கள் என்பது மட்டுமல்லாமல், தங்களது சொந்த மாவட்டங்களில் வனம் மற்றும் வன உயிரினங்களைப் பாதுகாக்க பணியாற்றுவதில் பெரும் மகிழ்ச்சியடைவார்கள்” என்றார்.
இதுகுறித்து பாரதியார் கல்லூரி துணைவேந்தர் பி. காளிராஜ் கூறுகையில், "வரும் கல்வியாண்டில் வனவிலங்கு உயிரியல் தனிப் பாடப்பிரிவினை தொடங்க ஒரு அரசாணையை எதிர்பார்க்கிறோம். அந்த வகையில் அரசாணை வருமானால் நிச்சயமாக இந்த பாடப்பிரிவு தொடங்கப்படும்” என்றார்.
மேலும் அவர், உதகை கல்லூரியில் அந்த குறிப்பிட்ட துறையில் பணியில் இருக்கும் சனில் என்ற இணை பேராசிரியரை தொடர்பு கொள்ளும்படி கூறினார்.
தொடர்ந்து பேராசிரியர் சனில் நம்மிடம் பேசுகையில், ’’வனவிலங்கு உயிரியல் மட்டும் படிக்கும் மாணவர்களுக்கு வனத்துறையில் நல்ல பணிக்கு சேர வாய்ப்புகள் அதிகம்’’ என ஒப்புக்கொண்டார். பிறகு ஏன் இந்த பாடப்பிரிவினை அரசாணைக்கிணங்க தனியாக கொண்டு வரவில்லை என்ற கேள்விக்கு, "அரசாணையை நிறைவேற்றுவதில் சில குழப்பங்கள் நிலவின. இது குறித்து பல்கலைக்கழகத்துக்கு கல்லூரியின் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிறகு பல்கலைக்கழகம் இதற்கான ஒரு குழுவை நியமித்துள்ளன. இந்த குழு எடுத்த முடிவு என்ன என்பதை இனி வரும் நாள்களில் தெரியவரும்" எனத் தெரிவித்தார்.
வரும் கல்வியாண்டில் பாரதியார் பல்கலைக்கழகத்திலிருந்து உத்தரவு வந்தால் இந்த ஆண்டே வனவிலங்கு உயிரியல் பாடப்பிரிவினை தொடங்கலாம் என தெரிவித்த அவர் ஏற்கெனவே வனவிலங்கு உயிரியல் படித்த மாணவர்கள் நல்ல வன ஆராய்ச்சியாளர்களாகவும், படிப்பிற்கேற்ற பணியில் உள்ளதாகவும் விளக்கினார். வரும் கல்வியாண்டிலேயே பாரதியார் பல்கலைக்கழகம் விரைந்து செயல்பட்டு மேற்கண்ட பாடப்பிரிவுகளை வனஉயிரின உயிரியல் என்று தொடங்கவேண்டும் என்பதே மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க: 'நடப்பு கல்வியாண்டில் பெண்களுக்கு உயர் கல்விக்கான மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும்'