சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 143 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2021-22ஆம் கல்வியாண்டில் இளநிலைப் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கு நாளை (ஜூலை. 26) முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.
மாணவர்கள் சேர்க்கைகான விண்ணப்பம்
இது குறித்து உயர் கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாட்டில் உள்ள 143 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2021-22ஆம் கல்வியாண்டில் இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கைகான விண்ணப்பங்களை www.tngasa.in, www.tngasa.in என்கிற இணையதளத்தில் மாணவர்கள் ஜூலை 26ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதிவரையில் விண்ணப்பிக்க முடியும்.
கட்டண விவரம்
மேலும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க இயலாத மாணவர்களுக்கு கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இந்த மையங்களில் போதுமான அளவில் கரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொதுப்பிரிவினர் 48 ரூபாய் விண்ணப்ப கட்டணம் மற்றும் 2 ரூபாய் பதிவு கட்டணத்தை இணையதள வாயிலாக செலுத்தலாம். பட்டியலின பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. பதிவு கட்டணம் 2 ரூபாய் மட்டும் செலுத்த வேண்டும்.
இ-சேவை மையம் மூலம் விண்ணப்பம்
இணைய வாயிலாக கட்டணம் செலுத்த இயலாத மாணவர்கள் மாவட்ட சேர்க்கை சேவை மையங்களில் The Director, Directorate of Collegiate Education, Chennai-6 என்கிற பெயரில் வங்கி வரைவோலை மூலமாகவோ அல்லது நேரடியாகவோ கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் அரசு இ-சேவை மையத்தின் மூலமும் விண்ணப்பம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. மேலதிக விவரங்களுக்கு கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் 044-28260098, 28271911 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: QR கோடால் கோலோச்சும் அரசுப் பள்ளி ஆசிரியர்