தமிழ்நாட்டில் கரோனா பரவல் படிபடியாகக் குறைந்து வந்தாலும், உலக நாடுகள் மத்தியில் இரண்டாவது அலை உச்சத்தை எட்டியுள்ளதால், முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசும் மருத்துவர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும் தற்போது தொடர் பண்டிகைக் காலம் என்பதால் பொது மக்கள் கரோனா வைரஸ் பயத்தை மீறி பண்டிகைக் கால உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர்.
அந்த வகையில் நாடு முழுதும் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகை வருவதற்கு இன்னும் 13 நாள்களே உள்ள நிலையில், தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நேற்று (நவ.01) சென்னை தியாகராய நகரில் தீபாவளி விற்பனை களைக்கட்டியுள்ளது.
கரோனா பீதியையும் தாண்டி பொதுமக்கள் கூட்டம் தொடர்ந்து அலைமோதி வருகிறது. இந்நிலையில், வார இறுதி நாள் என்பதால் தி.நகரில் நேற்று (நவ.01) காலை முதல் கூட்டம் காணப்பட்டது. மேலும், தீபாவளி விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது என வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். ஆனால், இம்மகிழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும், பொதுமக்கள் முகக்கவசங்களை நிச்சயம் அணிந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தொடர் திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கைது!