சென்னை: ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட்டில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னைக்கு வந்து கொண்டு இருந்தது. அந்த விமானத்தில் 164 பயணிகள் பயணித்துக் கொண்டு இருந்தனர். விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருந்தபோது விமானத்தில் பயணித்த செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தை சேர்ந்த சுரேந்தர் (34) என்ற பயணி விமானத்தில் மதுவை வாங்கி அதிக அளவில் அருந்தியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து சுரேந்தர் மது போதையில் சக பயணிகளிடம் பிரச்சினை செய்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த விமானப் பணிப் பெண்கள் சுரேந்தரிடம், இது 164 பயணிகள் பயணித்துக் கொண்டிருக்கும் விமானம், இங்கு அமைதி காக்க வேண்டும். சக பயணிகளுக்கு இடையூறு செய்யக்கூடாது என்று அறிவுரைத்து உள்ளனர்.
ஆனால் சுரேந்தர் அதைக் கேட்காமல் தொடர்ந்து சக பயணிகளை ஆபாச வார்த்தைகளால் திட்டி தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. அதை கண்டித்த விமான பணிப் பெண்களையும் சுரேந்தர் ஒருமையில் பேசி தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. பொறுமை இழந்த விமானப் பணிப் பெண்கள் தலைமை விமானியிடம் புகார் அளித்து உள்ளனர்.
இதையும் படிங்க: "நீங்க கொடி ஏத்துறதை பார்க்கனும்" மாணவனின் கனவை நிறைவேற்றிய முதலமைச்சர் ஸ்டாலின்!
இதனை தொடர்ந்து விமானி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு பயணி ஒருவர் விமானத்திற்குள் ரகளை செய்து சக பயணிகளுக்கு இடையூறு விளைவிப்பதாக புகார் அளித்து உள்ளார். எனவே விமான நிறுவன பாதுகாப்பு அதிகாரிகளை தயார் நிலையில் இருக்கும் படி கூறி உள்ளார்.
இந்நிலையில், விமானம் சென்னை விமான நிலையத்தில் தரை இறங்கியதும் விமான பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்துக்குள் விரைந்து மது போதையில் ரகளையில் ஈடுப்பட்ட பயணி சுரேந்தரை பிடித்து, பின்பு சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் ஓப்படைத்தனர்.
இதையடுத்து சுரேந்தர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடுவானில் விமானத்தில் குடி போதையில் பயணி ஒருவர் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் விமான பயனிகளிடையே பெரும் அச்சத்தையும் முகச் சுழிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: "மாணவர்களிடம் ஜாதி மோதலை ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகள் திணிக்கின்றன" - திருமாவளவன் குற்றச்சாட்டு!