சென்னை: கொளத்தூர், கண்ணகி நகரைச் சேர்ந்த அஸ்லாம் பாஷா (வயது 49) என்பவர், கடந்த 2019 ம் ஆண்டு மே மாதம் 26 ம் தேதி மாதவரம் ரவுண்டானா ரெட்டை எரி அருகில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது, அவரின் ஆணுறுப்பை, மர்ம நபர் கடித்துக் குதறியதாகவும், மர்ம உறுப்பு அறுபட்ட நிலையில், உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதாக மாதவரம் காவல் நிலையத்திற்குத் தகவல் வந்தது. இந்த சம்பவம், அந்த பகுதியில், காட்டுத்தீ போலப் பரவியது.
அதன்பின் சம்பவ இடத்துக்குச் சென்ற மாதவரம் போலீசார் அங்கு ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அஸ்லாம் பாஷாவை மீட்டு, அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி, 4 நாட்களுக்குப் பிறகு உயிரிழந்தார்.
இது குறித்து மாதவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளியைத் தேடி வந்தனர். இந்நிலையில், மூன்று நாட்களுக்குப் பிறகு, மீண்டும் ஜூன் 3 ம் தேதி நள்ளிரவு, ரெட்டேரி மேம்பாலம் அருகே தூங்கிக்கொண்டிருந்த மூலக்கடையைச் சேர்ந்த கூலித் தொழிலாளி நாராயணசாமி (வயது 39) என்பவரது மர்ம உறுப்பும் அறுக்கப்பட்டு உயிருக்குப் போராடினார். அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்குக் கொண்டு போய் சேர்த்தனர்.
ரெட்டேரி பகுதியில், ஒரே வாரத்தில் நடைபெற்ற இருவேறு சம்பவங்கள், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன. நிலைமை விபரீதமாவதை அறிந்த போலீசார், அப்பகுதியிலிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், அவர்களுக்குத் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
அஸ்லாம் பாஷா மற்றும் கூலித் தொழிலாளி நாராயணசாமியின் மர்ம உறுப்பை கடித்தது உள்ளிட்ட இரண்டு சம்பவங்களையும் செய்தது ஒரே நபர் என தெரிய வந்தது. பின் தேடுதல் வேட்டையில், தீவிரமாக இறங்கிய் போலீசார், மானாமதுரையைச் சேர்ந்த முனியசாமி (வயது38) என்ற குற்றவாளியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன்பின் சிறையிலிருந்து ஜாமினில் வெளிவந்த முனியசாமி கடந்த 2 வருடமாக போலீஸ் நிலையத்திலும், நீதிமன்றத்திலும் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார்.
மீண்டும் கைது: தலைமறைவாக இருந்த முனியசாமியை பிடிக்க, கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையாளர் சக்திவேல் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் நேற்று (மே 30), மானாமதுரையில் வைத்து தலைமறைவு குற்றவாளி முனியசாமியை பொறி வைத்து பிடித்து கைது செய்தனர்.
அதன்பின் போலீசார் முனியசாமியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.இரண்டு வருடங்களாக, போலீசுக்கு போக்கு காட்டி தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது செய்யப்பட்டு இருக்கும் நிகழ்வு, பொதுமக்களை மட்டுமல்லாது, போலீசாரையும் நிம்மதி பெருமூச்சு விட வைத்து உள்ளது.