சென்னை: கரோனா தொற்று பரவலை அடுத்து தமிழ்நாட்டில் அரியர் தேர்வுகளை ரத்து செய்து, அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி அரியர் தேர்வுக்குக் கட்டணம் செலுத்திய மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்த அரசாணையை எதிர்த்து வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழ்நாடு அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அரியர் தேர்வு மாணவர்களுக்கு இரு துணைத் தேர்வுகள் நடத்தப்பட்டது. அரியர் தேர்வுகளை ரத்து செய்த அரசாணையை அமல்படுத்தவில்லை. தேர்வு எழுதாமல் மாணவர்களுக்குத் தேர்ச்சி வழங்கவில்லை எனத் தெரிவித்தார்.
இறுதி பருவத் தேர்வுகளையும், இடைப்பட்ட பருவத் தேர்வுகளையும் நடத்த வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு விதிகளை வகுத்துள்ளதாக பல்கலைக்கழக மானியக் குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வாதங்களைப் பதிவு செய்த நீதிபதிகள், இந்த வழக்கில் மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்கத் தேவையில்லை எனக் கூறி, வழக்கை முடித்து வைத்தனர். மேலும், தேர்வு எழுதாமல் எந்த மாணவருக்கும் சான்றிதழ் வழங்கக் கூடாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்
இதையும் படிங்க: தமிழ்நாட்டின் வேலைவாய்ப்புகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழக்கு ஒத்திவைப்பு