தேர்தல் நடைபெறும் நாள், வாக்கு எண்ணிக்கை நாள்களில் எந்தவித அசம்பாவிதங்களும் நிகழாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்துவருகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டில் ஏப்ரல் 4ஆம் தேதிமுதல் 6ஆம் தேதிவரையும் வாக்கு எண்ணிக்கை நாளான மே 2ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ஏறக்குறைய 450 டாஸ்மாக் கடைகள் உள்ளன. டாஸ்மாக் ஏப்ரல் 4ஆம் தேதி மூடப்படுவதையடுத்து ஏப்ரல் 2, 3 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து டாஸ்மாக் ஊழியர்கள் மதுபானங்களை இருப்புவைத்து விற்பனை செய்ய ஏற்பாடு செய்துவருகின்றனர்.
இது குறித்து புரசைவாக்கத்தில் உள்ள டாஸ்மாக் ஊழியர் கூறுகையில், "மார்ச் 29ஆம் தேதி ஒரு வாகனத்தில் மதுபானங்கள் வந்து இறங்கின. இந்நிலையில் இன்றும் ஒரு வாகனத்தில் மதுபானங்கள் வந்து இறங்கின. ஏப்ரல் 2ஆம் தேதியும் ஒரு வாகனத்தில் மதுபானங்கள் வந்து இறங்கலாம். அடுத்த மூன்று நாள்களில் மதுபான விற்பனை உச்சத்திற்குச் செல்லும்" எனத் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் மூலம் ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்டிவருகிறது. தேர்தலுக்காகத் தொடர்ந்து மூன்று நாள்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதால் அரசுக்கு கணிசமான அளவு வருமான இழப்பு ஏற்படும்.
எனினும், அதற்கேற்ற விற்பனை கடைகள் மூடும் முன்பே சூடுபிடிக்கும். இதனால் பெரும் அளவிற்கு இழப்பு இருக்காது என டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.