சென்னை: கொடுங்கையூர் பகுதியில் வசித்து வருபவர் பாண்டி. இவருக்கு மூன்று மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். அதில் ராம், லக்ஷ்மன் ஆகிய இரண்டு மகன்களும் ராணுவத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி அன்று, பாண்டியின் வீடு முன்பு, குடிபோதையில் சிலர் தகராறில் ஈடுபட்டனர். இது தொடர்பான ஆடியோ மற்றும் வீடியோவுடன், கொடுங்கையூர் காவல் நிலையத்தில் பாண்டி புகார் அளித்தார். ஆனால் இது குறித்து காவல்துறையினர் எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
ராணுவ மேஜர் கடிதம்
இதையடுத்து பாண்டி இச்சம்பவம் குறித்து ராணுவத்தில் பணிபுரியும் மூத்த மகன் ராமரிடம் கூறியுள்ளார். இது தொடர்பாக ராமர் புகார் அளித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிராக சண்டையிட்டு வரும் ராணுவ வீரரான இரண்டாவது மகன் லட்சுமணனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்து. பின்னர் லட்சுமணனின் உயர் அலுவலரான மேஜர் ரீனத் பரத்வாஜ், தகராறு தொடர்பாக, சென்னை காவல் ஆணையருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், “எனக்கு கீழ் பணிபுரியும் ராணுவ வீரரான லக்ஷ்மன் ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிராக எல்லையில் சண்டையிட்டு வருகிறார். இந்த குடும்ப பிரச்னைக்காக ஜம்மு காஷ்மீரிலிருந்து அடிக்கடி வரமுடியாத சூழ்நிலையில் இருக்கிறார். எனவே அவரது குடும்பத்தினரை தாக்கிய நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆகிய நான்..! - சசிகலா