சென்னையை அடுத்த குரோம்பேட்டை, பாரதிபுரம், 28ஆவது வார்டு சாரதி தெருவில் சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்த சுடுகாடு ஒன்று உள்ளது. இங்கு பாரதிபுரம் குடியிருப்போர் நலசங்கம், நடராஜபுரம், பொதுநலசங்கங்களில் இறந்தவர்களின் உடல்களை எரியூட்டவும் அடக்கம் செய்யவும் பாரதிபுரம் சுடுகாடு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சுடுகாட்டில் உள்ள அரிச்சந்திரன் சிலை, அடையாளம் தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டு முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது. மேலும் சிலை வைக்கபட்டிருந்த கோபுரத்தையும் சேதப்படுத்தியுள்ளனர். இது குறித்து சிட்லப்பாக்கம் காவல் துறையினரிடம் புகார் தெரிவிக்கபட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சிலையை உடைத்த நபர்களைத் தேடி வருகின்றனர்.
மேலும் சிலையை உடைத்த நபர்களை கைது செய்யாவிடில் ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாகவும் மூத்த குடிமக்கள் நலசங்கம் அறிவித்துள்ளது.