சென்னை: தமிழ்நாட்டில் ஆகம விதிகளைப் பின்பற்றும் கோயில்களில் வழிபாட்டு முறை, கோயில் நிர்வாகம், அர்ச்சகர் நியமனம் ஆகிய அனைத்தும் அந்தந்த கோயில்களுக்கான ஆகம விதிகளின்படியே பின்பற்ற வேண்டும் என்று ஆகஸ்ட் 22ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு, 2000 ஆண்டுகள் போராடி பெற்ற வெற்றியை மீண்டும் தீண்டாமை எனும் அதலபாதாளத்திற்கு கொண்டு சென்றுவிட்டதாக அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்தின் தலைவர் வா. ரங்கநாதன் தெரிவித்தார்.
தீர்ப்பின் சாரம்: இதுகுறித்து வா. ரங்கநாதன் ஈடிவி பாரத் ஊடகத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில், “இந்து சமய அறநிலையத் துறை புதிய விதிகள் செல்லாது என்றும், ஆகம விதிகளின்படியே அர்ச்சகர் நியமனம் செய்யப்பட வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு கோயில் கருவறையில் குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே செல்ல வேண்டும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது. நீதிமன்றமும் நீதிபதியும் தீண்டாமையை உறுதி செய்ததே அந்த தீர்ப்பின் சாரம்.
கருவறையில் தீண்டாமை: கோயில் கருவறையில் காலம் காலமாக ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே பூஜை செய்ய வேண்டும், அவர்கள் மட்டுமே உள்ளே செல்ல வேண்டும். அந்த சாதியினர் வரக்கூடாது. அந்த சாதியினர் சாமி கும்பிட கூடாது என்று பல்வேறு ஏற்றத்தாழ்வு உள்ளது. ஏன் இந்த ஏற்றத்தாழ்வு என்பது தெரியவில்லை. கடந்த 2,000 ஆண்டுகளாக கோயில் கருவறையில் தீண்டாமை இருக்கிறது. குறிப்பாக கோபுர தரிசனம் ஒரு சாதியினருக்கு, மகா மண்டபம் ஒரு சாதியினருக்கு, கொடி மரம் ஒரு சாதியினருக்கு, அர்த்தமண்டபம் ஒரு சாதியினருக்கு என்று பிரிக்கப்பட்டுள்ளது.
இதனை எதிர்த்து தொடர்ந்து போராடியவர் பெரியார். இந்த போராட்டத்தின் அடிப்படையிலேயே கடவுள் இல்லை, கல் என்றார். பார்ப்பனர்கள் மட்டுமே பூஜை செய்ய வேண்டுமா..? மற்ற சாதியினர் தொட்டு பூஜை செய்ய கூடாதா என்று கேள்வி எழுப்பினார். அவர் 1959ஆம் ஆண்டில் கோயில் நுழைவுப் போராட்டத்தை அறிவித்தபோது, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை உடனடியாக இயற்றி, கோயில் கருவறையில் பூஜை செய்ய வழிவகை செய்யப்படும் என்று அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி உத்தரவாதம் அளித்த நிலையில், பெரியார் தனது போராட்டத்தை திரும்ப பெற்றார்.
கருணாநிதி ஆட்சிக்காலத்தில் பரம்பரை வழி அர்ச்சகரை ஒழித்தார். இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் நிறைவேற்றப்படவில்லை. 2006ஆம் ஆண்டு அரசாணை மட்டுமே பிறப்பிக்கப்பட்டது. இதற்கு முன்னதாகவே, மதுரையை சேர்ந்த ஆதித் சிவாச்சாரியார் நல சங்கத்தினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, தடை வாங்கினார்கள்.
கடவுளை தொட்டு பூஜை: அர்ச்சகர் பயிற்சி பள்ளி கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பயிற்சிகளில் முறையாக தமிழ் முறைப்படி தேவாரம் திருவாசகம், திருமந்திரம் போன்ற மந்திரங்களும், சமஸ்கிருத முறைப்படி ருத்ரம், இது போன்ற மந்திரங்களும், ஆகம முறைப்படி பயிற்சி பெற்று இருக்கிறோம், அதற்கான தகுதியையும் பெற்றிருக்கிறோம்.
கடவுளை தொட்டு பூஜை செய்யும் முறைக்கான, தீட்சையை ஆதீனங்கள் மூலம் பெற்று இருக்கிறோம். கோயில் வழிபாடு, சிலை வழிபாடு, அர்ச்சனை என்பது குறித்து செய்முறை பயிற்சி செய்து காட்டியுள்ளோம். எழுத்து தேர்வு மூலமும் நிரூபித்து உள்ளோம். பிராமண அச்சர்கள் எவ்வாறு பூஜை செய்வார்களோ அதே போன்று முழு தகுதியும், எங்களுக்கு உண்டு. ஒரு ஆகம விதிப்படி உள்ள கோயிலில் எவ்வாறு பூஜை செய்ய வேண்டும் என்பது குறித்து எங்களுக்கு தெரியும் அதற்கான தகுதியும் எங்களிடம் உள்ளது. ஆனால் கோயில் கருவறைக்குள் எங்களால் செல்ல முடியவில்லை.
பார்ப்பனர்கள் தவிர்த்து பிற சாதியினர் கோயில் கருவறைக்குள் உள்ள போக முடியாதது எங்களுடைய பிரச்னையாக உள்ளது. இந்த பிரச்சனை தொடர்ச்சியாக 15 ஆண்டுகளுக்கு மேலாக இருந்துவருகிறது. இதற்காக பல்வேறு கட்சிகள் தொடர்ச்சியாக போராடி குரல் கொடுத்து வந்தனர். நீண்ட போராட்டத்திற்கு பின் கடந்தாண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின், 24 அர்ச்சகர் மாணவர்களுக்கு எல்லா சாதியினரும் இட ஒதுக்கீடு அடிப்படையில், ஆகம கோயில் மற்றும் ஆகம அல்லாத கோயில்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.
2000ஆம் ஆண்டுகள் போராட்டம்: இந்த பணி ஆணை பெற்று ஓராண்டு காலமாகிவிட்டது. அர்ச்சகராக பணி நியமனம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இப்போது வரை 27 வழக்குகள் போடப்பட்டுள்ளன. பார்ப்பன அர்ச்சகர்கள், பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்டவர்கள் வழக்குகளை தொடுத்துள்ளனர். இந்த 27 வழக்குகளின் தீர்ப்பே உயர் நீதிமன்றம் ஆகஸ்ட் 22ஆம் தேதி வழங்கியது. இந்து சமய அறநிலைத்துறையில் விதிகள் ஏழு மற்றும் ஒன்பதில், அர்ச்சகர் உடைய தகுதி, திறமை, தனிப்பட்ட தகுதி உள்ளிட்டவை பொருந்தாது என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆகமம் என்றால் என்ன..?: ஆகமம் என்பது தமிழிலிருந்து உருவாக்கப்பட்டது. இது வழிபாட்டு முறை, கட்டுமானம், சிலைகளின் வடிவமைப்பு சார்ந்ததே தவிர, இந்த சாதிதான் பூஜை செய்ய வேண்டும் என்று கிடையாது. ஆகமத்தில் ஒரு சாதியினர் தவிர, வேற்று சாதியினர் பூஜை செய்தால் அதன் சக்தி குறைந்துவிடுமா..? இப்படி ஏன் கோயிலை பிரிக்க வேண்டும்.
கோயில் என்பது அனைவருக்கும் பொதுவானது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் அனைவரும் சமம் என்றும் அந்த சட்டத்தில் மற்ற மதத்தினர் பூஜை செய்யக்கூடாது என்றும் சொல்லவில்லை. கோயில் என்பது பார்ப்பனருக்கு மட்டும் அல்ல, அனைத்து பொது மக்களுக்கும் அனைத்து சாதியினருக்கும் பொதுவானது. கோயில்கள் அனைத்து மக்களுக்கானது, பார்ப்பனர் கோயிலாகவும் பார்ப்பனர் அல்லாத கோயிலாகவும் இதனை பிரிக்க வேண்டிய அவசியம் நீதிமன்றத்திற்கு கிடையாது.
இந்த தீர்ப்பில் 5 பேர் கொண்ட குழு அமைப்பதை தமிழ்நாடு அரசு தடுத்து இருக்க வேண்டும். 2006ஆம் ஆண்டு நீதிபதி ஏ.கே. ராஜன், தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் அர்ச்சகரின் குறித்த விபரத்தை பதிவு செய்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள மொத்த சைவ கோயில்களில் 677 அர்ச்சகர்கள் பணி செய்கின்றனர். அதில் மூன்றாண்டு அர்ச்சகர் பயிற்சி பெற்ற நபர்கள் எண்ணிக்கை 62 பேர், இரண்டாண்டு பயிற்சி பெற்றவர்கள் 9 பேர், பரம்பரை வழி அர்ச்சகர்கள் 251, தந்தை வழி வந்தவர்கள் 278 பேர் என்றும், வைணவ கோயிலில் மொத்தமாக 124 அர்ச்சகர்கள் உள்ளனர். அதில் ஒரே ஆண்டு படித்தவர்கள் 5 பேர், பரம்பரை வழி அர்ச்சகர்கள் 55 பேர், தந்தை வழியில் 64 பேர் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
ஆகம விதி என்றால் என்ன?: ஆகமம் என்றால் காலையில் ஆறு மணிக்கு கோயில் திறந்து மதியம் 12 மணிக்கு நடை சாத்தி, மீண்டும் மூன்று மணிக்கு திறந்து ஒன்பது மணிக்கு நடை சாத்த வேண்டும். கோயில் கருவறையில் விளக்கு மட்டும் தான் இருக்க வேண்டும். மின்விசிறையோ ஏசி அல்லது லைட் பயன்படுத்தக்கூடாது. ஆனால் இப்போது புத்தாண்டு அன்று இரவில் வழிபாடு நடைபெறுகிறது. கார் சாவி, பைக் சாவிகள் வைத்து பூஜை செய்து தரப்படுகிறது. மின்சாதன பொருள்கள் பயன்படுத்தப்படுகிறது. அர்ச்சகராக பணிபுரியும் அனேக பேருக்கு தகுதியே இல்லை. கோயில் சொத்துக்கள் ஆன வருமானத்தை கொள்ளையடிக்கின்றனர். பக்தர்களை அவமானம் படுத்துகின்றனர்.
எதற்கு ஐந்து பேர் கொண்ட குழு..?: இந்து சமய அறநிலை துறை இருக்கக் கூடாது என்றும், இது தனியார் மையமாக பட வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்த குழு அரசிடம் இருக்கிற கோயிலை பார்ப்பனர்களிடமும், ஆர்எஸ்எஸ்யிடமும் கொடுக்க வழிவகுக்கிறது. இது சாதிய தீண்டாமையை உருவாக்குகிறது. தமிழ்நாட்டில் கலாச்சார உரிமையை பறிப்பதற்கான வேலையை நீதிமன்றம் மூலம் பார்ப்பனர்கள் நடைமுறைப்படுத்தி வருகிறார்கள்.
அனைத்து சாதியினரையும் வைத்து கட்டிய கோயில்களில் பார்ப்பனர்கள் மட்டும் அனுமதி என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்திய அரசியல் சட்ட படி பொது வெளியில் பட்டியலினத்தவருக்கு கையில் தண்ணீர் தந்தால் குற்றம், ஆனால் கருவறையில் பார்ப்பனர்கள் அப்படி செய்கிறார்கள். அர்ச்சகர் பணியாணையைப் பெற்ற அர்ச்சகர்கள் தங்கள் பணியை செய்ய முடியாத சூழ்நிலையில் உள்ளனர். ஏன் எங்களை வழிபாடு செய்ய அனுமதிக்கவில்லை..? 2000 ஆண்டுகளாக போராடி பெற்ற பெற்ற வெற்றியை இழந்து மறுபடியும் பின்னோக்கி தீண்டாமை நோக்கி சென்றுள்ளோம். மக்களுடைய ஜனநாயகம் கீழே இறங்கி போய் உள்ளது. ஆகமம் என்ற பெயரால் நம்மை பிரிக்கிறார்கள். ஆகமத்தை சொத்தாகவும் பரம்பரையாகவும் பார்க்கிறார்கள்.
தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை: தமிழ்நாடு அரசு மறுபரிசீலனை செய்து மறு சீராய்வு மனு போட வேண்டும். 18 வயது முதல் 35 வயது வரை உள்ள வயது வரம்பை 45 வயதாக உயர்த்த வேண்டும். கோயில்களில் இட ஒதுக்கீடு அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும். நீதிமன்றம் மனு தர்மமாக செயல்படுகிறது. பாலின வேறுபாடு இன்றி இரு பாலாறும் கோயில் கருவறையில் நின்று பூஜை செய்ய வழிவகை செய்ய வேண்டும். நான் பார்ப்பனர்களை கோயிலை விட்டு வெளியே செல்ல சொல்லவில்லை, அனைத்து சாதியினரும் சேர்ந்து பூஜை செய்ய வேண்டும், அனைவரும் சமம் என்று தான் சொல்லி வருகிறோம்” எனத் தெரிவித்தார்.