சென்னை: கோயம்புத்துர் காளப்பட்டி சாலையில் உள்ள தனது வீட்டில் அண்ணாமலை சாட்டையடி போராட்டம் நடத்தினார். பச்சை வேட்டி அணிந்து மேல் சட்டை அணியாமல் வீட்டை விட்டு வெளியே வந்த அண்ணாமலை கயிறால் செய்யப்பட்ட சாட்டையால் தன்னைத் தானே அடித்துக் கொண்டார்.
ஏழு முறை தன்னைத் தானே சாட்டையால் அடித்த நிலையில், எட்டாவது முறை சாட்டையால் அடிக்கும் போது பா.ஜ.க.வினர் அவரை தடுத்து நிறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணா பல்கலைக் கழக பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் எஃப்.ஐ.ஆர். கசியவிடப்பட்டதற்கு காவல்துறையின் கவனக்குறைவே காரணம் என குற்றம் சாட்டினார். கடவுளுக்கு வேண்டி விரதம் இருக்கும் விதமாக இந்த சாட்டையடி போராட்டத்தை தான் கையில் எடுத்துள்ளதாக அண்ணாமலை கூறினார்.
எனது காலணியை நேற்றே கழற்றி வைத்துவிட்டேன். திமுக வை ஆட்சியிலிருந்து இறக்கும் வரை தான் காலணி அணியப்போவதில்லை எனவும் அண்ணாமலை கூறினார். முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன் சிங் மரணத்தையொட்டி தமிழ்நாடு முழுவதும் பா.ஜ.க.வினர் திட்டமிட்டிருந்த போராட்டம் ஒத்தி வைக்கப்படுவதாகவும் அண்ணாமலை கூறினார்.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக எஃப்ஐஆர் கசியவிடப்பட்டதாக தமிழ்நாடு போலீஸ் விளக்கம் அளித்திருப்பதாக குற்றம் சாட்டிய அண்ணாமலை, முன்னாள் போலீஸ் அதிகாரி என்ற முறையில் அவ்வாறு எஃஐஆர் கசியவிடப்படுவதற்கு வாய்ப்பே இல்லை என்பதை தான் நம்புவதாகவும் கூறினார்.