சென்னை: தலைமைச் செயலகத்தில் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவை சந்தித்த அறப்போர் அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் புகார் ஒன்றை அளித்தார், அதில் "ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்காளர்களை ஒரு இடத்தில் அழைத்துக் கொண்டு வந்து அங்கு அமர வைத்து, தினமும் 500 ரூபாய் பணம் கொடுத்து புதியதாக லஞ்சம் கொடுக்கக்கூடிய முறையை திமுக காங்கிரஸ் இந்த இடைத்தேர்தலில் உருவாக்கி உள்ளது. இதைத் தவிரப் பல பரிசுப் பொருட்கள் கொடுப்பதும் ஊடகங்களில் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதற்கான ஆதாரங்களை இணைக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
புகார் மனு கொடுத்த பின் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயராமன், “கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற பிரச்சாரங்களில் வாக்காளர்களுக்கு பல்வேறு விதமாக லஞ்சங்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும். பணத்தினுடைய மிகப்பெரிய தாக்கம் இந்த தேர்தலில் உள்ளது” என்றார்.
மேலும், “வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா தொடர்பான பல்வேறு ஆதாரங்கள் அடங்கிய வீடியோவை சமர்ப்பித்துள்ளோம். திருமங்கலம் இடைத்தேர்தல் ஃபார்முலா, ஆர்.கே.நகர் தேர்தல் ஃபார்முலா, என்பது போல ஈரோடு கிழக்கு தொகுதி ஃபார்முலா என ஒன்று உருவாகி உள்ளது. ஜனநாயகத்தைக் கேலிக் கூத்தாக்கியுள்ளது, ஆகையால் இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும்.மேலும் இதில் போட்டியிடும் வேட்பாளர் மீண்டும் போட்டியிடாத வகையில் தகுதி நீக்கச் செய்ய வேண்டும், அது தொடர்பான சட்டத் திருத்தம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளோம்” என தெரிவித்தார்.