சென்னை: தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு சென்னை தலைமைத் செயலகத்தில் இன்று (மார்ச் 29) செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 102 வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 205 கன்ரோல் யூனிட், ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 807 விவிபேட் தயார் நிலையில் உள்ளன.
80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகளிடம் வீடு வீடாகச் சென்று அஞ்சல் வாக்குகள் பெறும் பணிகள் நடைபெற்றுவருகின்றன, தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்களுக்குப் பயிற்சி அளிக்கும் மையங்கள் அல்லது அஞ்சல் அலுவலங்களில் அஞ்சல் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரசு அலுவலர்களுக்கு 12டி படிவம் இதுவரை ஒரு லட்சத்து 85 ஆயிரத்து 57 வழங்கப்பட்டுள்ளது. இதில் 89 ஆயிரத்து 185 படிவங்கள் திரும்ப கிடைக்கப்பெற்றுள்ளன. இன்னும் 10 லட்சத்து 55 ஆயிரத்து 667 படிவங்கள் கிடைக்கப்பெற வேண்டும்.
தமிழ்நாட்டில் 537 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவையாகவும், 10 ஆயிரத்து 813 வாக்குச்சவாடிகள் பதற்றமானவையாகவும் கண்டறியப்பட்டுள்ளன.
இதுவரை மொத்தம் 319.02 கோடி ரூபாய் மதிப்பிலான பணம், தங்கம், வெள்ளி, மதுபானங்கள் உள்ளிட்டவை பறிமுதல்செய்யப்பட்டுள்ளன. வருமானவரித் துறையினரால், 60.58 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சேலத்தில் 40.47 கோடி ரூபாயும், சென்னையில் 18.75 கோடி ரூபாயும், திருப்பூரில் 13.35 கோடி ரூபாயும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சிவிஜில் மூலம் இதுவரை 3,464 புகார்கள் வந்துள்ளன. இதில் 2,580 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக கரூரில் 671 புகார்களும், கோவையில் 593 புகார்களும், திருப்பூரில் 244 புகார்களும், கன்னியாகுமரியில் 238 புகார்களும், சென்னையில் 193 புகார்களும் வந்துள்ளன.
வாக்காளர்களுக்கு பூத் சிலிப் விநியோகிக்கும் பணி இன்றுமுதல் தொடங்கப்பட்டுள்ளது. புகார்கள் அதிகமாக வரக்கூடிய தொகுதிகளில் தேர்தலை நிறுத்துவதாக இல்லை. அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம்தான் முடிவுசெய்யும்.
ஆ. ராசா விமர்சித்தது குறித்த புகாரையும், தேர்தல் அலுவலரின் அறிக்கையையும் இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. தனிநபர் விமர்சனம் தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது. எனவே திமுகவின் ஆ. ராசா விமர்சனம் தொடர்பான அறிக்கையை அனுப்பி இருக்கிறோம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: முதலமைச்சரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்கிறேன்: ஆ. ராசா