சென்னை: கிழக்கு கடற்கரை சாலை, பனையூரில் நடைபெற்ற 'மறக்குமா நெஞ்சம்' ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி (live in concert) நேற்று மாலை துவங்கி இரவு வரை நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முறையாக நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக இருக்கை வசதி, வாகன நிறுத்த வசதி, குடிநீர் உள்ளிட்டவை சரியாக ஏற்பாடு செய்யவில்லை என்று புகார் எழுந்தது.
அதே போல் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில் முதலமைச்சர் கான்வாய் வாகனமும் சிக்கி எதிர் திசையில் மாற்றி விடப்பட்டது. இந்நிலையில் நிகழ்ச்சி நடத்த இடத்தில் தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் ஆய்வு செய்து நிகழ்ச்சி முன் செய்யப்பட்ட ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.
இந்த நிலையில் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிக்கு தானே பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார். ”இசை நிகழ்ச்சி நடந்த இடத்தில் சரியான முன்னேற்பாடுகள் செய்யாததற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். பெரும் அளவில் ரசிகர்கள் இசை நிகழ்ச்சிக்கு வந்த நிலையில் சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை.
இதற்கு முன் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட கச்சேரிகளில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் சுலபமாக முடிந்தது. அதனால் இசை நிகழ்ச்சி நடத்திய நிறுவனங்களை தான் நம்பியதாகவும் இசை நிகழ்ச்சியை விட அங்கு வரும் மக்களை எப்படி நடத்த வேண்டும் என்பதே முக்கியமானது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் நான் பாடல்கள் பாடுவதில் அடுத்து என்னென்ன பட வேண்டும் என்பதே கவனமாக இருந்ததாகவும், ரசிகர்களை தனியார் நிறுவனம் வழி நடத்தும் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் நான் அதை கவனிக்காமல் விட்டதாக தெரிவித்துள்ளார். இதற்காக நான் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சி 90 சதவீதம் வெற்றி பெற்றாலும் 10 சதவீதம் வருத்தத்தை அளிக்கிறது. இந்த குளறுபடிக்கு தானே பொறுப்பேற்றுக்கொள்வதாகவும்” தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக ரசிகர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். மேலும் இந்த வாகன நெரிசலில் முதலமைச்சரின் கான்வாய் வாகனமும் சிக்கியதால் இந்த விவகாரம் காவல்துறை விசாரணை நடத்தும் அளவிற்கு சென்றுள்ளது. இந்த நிலையில் ஏ ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடி விவகாரம் தொடர்பாக இசை நிகழ்ச்சிக்கு தடையில்லா சான்றிதழ் பெறப்பட்டதா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இது போன்ற மிகப்பெரிய இசை நிகழ்ச்சி நடத்துவதற்கு காவல்துறை, தீயணைப்பு துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து அனுமதி பெற வேண்டும் என்பது விதிமுறையாகும். இந்த நிகழ்ச்சிகளுக்கு எவ்வளவு ரசிகர்கள் வருகிறார்கள், வாகனங்கள் செல்லும் வழி, மக்கள் செல்லும் வழி, வெளியேறும் வழி உள்ளிட்ட விவரங்களை காவல்துறையிடம் அளிக்க வேண்டும்.
மேலும் வாகனங்கள் நிறுத்துமிடம், மருத்துவ வசதி, குடிநீர் வசதி, எவ்வளவு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து எல்லாம் விரிவான தகவல்களை கொடுத்து தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். எனவே தடையில்லாச் சான்றிதழில் கொடுக்கப்பட்ட விவரங்களை விட அதிகமான கூட்டமோ அல்லது குளறுபடியே ஏற்பட்டால் மாநகர காவல் சட்டம் பிரிவு 76 இன் படி வழக்கு பதிவு செய்யப்படலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இசை நிகழ்ச்சி நடைபெற்ற இடம் கானாத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ளதால் அந்த காவல் நிலையத்தில் அப்படி எந்த ஒரு சான்றுகளும் வாங்கவில்லை எனவும், மாறாக தாம்பரம் காவல் அலுவலகத்தில் இது தொடர்பாக அனுமதி பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி குளறுபடி.. சம்பவ இடத்தில் தாம்பரம் காவல் ஆணையர் ஆய்வு.. காவல்துறை விளக்கம் என்ன?