ஹைதராபாத்: பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் காலங்களில் சக நண்பர்களிடம், நெருக்கமானவர்களிடம் April Fools' Day கொண்டாடியிருப்போம். விதவிதமாக யோசனைகளை செய்து, ஏமாற்றியிருப்போம். அதேபோல பலரிடம் ஏமாந்திருப்போம். சொல்லபோனால், காலையில் எழுந்த உடனேயே யாரிடமும் ஏமாறாமல் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே அந்த நாளை கடந்திருப்போம்.
ஆனால், நாளடைவில் அதை மறந்துவிட்டு, நமது வேலையை பார்க்கலாம் என்று மனம் மாறியிருப்போம். இருப்பினும், அந்த நினைவுகளை உங்களால் மறக்க முடியாமல் இருக்க வாய்ப்புள்ளது. தேவைப்பட்டால், நீங்கள் மீண்டும் முயற்சிக்கலாம். ஆனால், ஏமாற்ற விரும்புவோரை முட்டாளாக்க நினைக்காமல், வேடிக்கைக்காக மட்டுமே அதை செய்ய வேண்டும். அப்படியான சில யோசனைகளை தெரிந்து கொள்ளுங்கள்.
- நீங்கள் ஏமாற்ற விரும்புவோர் அருந்தும் டீ அல்லது காபியில் சர்க்கரைக்கு பதிலாக உப்பை சேர்க்கலாம்.
- ஒரு போலி லாட்டரி சீட்டை அச்சடித்து உங்கள் நண்பர்களுக்கு வழங்கியும், அந்த லாட்டரிக்கு பணம் விழுந்துள்ளது என்றும் கூறலாம்.
- சில வழக்கமான முறையான சிலந்தி, பாம்பு பொம்மைகளை நண்பர்கள் மீது வீசலாம் அல்லது அவர்கள் தூங்கும் போது அருகில் வைத்து விடலாம்.
- உங்களுக்கு மிமிக்ரி தெரிந்தாலோ அல்லது தெரிந்தவர்கள் நண்பர்களாக இருந்தாலோ அவர்களை வைத்து நீங்கள் ஏமாற்ற விரும்புவோருக்கு செல்போன் அழைப்பு விடுக்கலாம். காதலி போலவோ, போலீசார் போலவோ பேசலாம்.
- பெண்கள் தங்களது தோழிகளை ஏமாற்ற அவர்களது நெயில் பாலிஷ் பாட்டிலில் பசையை சேர்ந்து விடலாம். அது நகத்திலேயே ஒட்டிக்கொள்ளும் போது உண்மையை சொல்லிவிடுங்கள்.
- ஒரு போலியான வருமான வரி சான்றிதழையோ அல்லது சொத்து வரி சான்றிதழையோ அச்சடித்து ஏமாற்றி விரும்புவோரின் வீட்டின் முன்பு ஒட்டிவிடலாம்.
- உங்களது நண்பரின் செல்போன் ரிங்டோனை வேடிக்கையானதாக மாற்றலாம். அது சங்கடத்தை தரக்கூடியதாக இருப்பதை தவிர்த்துவிட்டு மாற்ற வேண்டும். இது அவர் கூட்டத்தில் இருக்கும்போது அவரையே வியப்படைய செய்யும்.
- நீங்கள் ஏமாற்ற விரும்பும் நபரின் வீட்டு வாசலில் போலியான அமேசான் டெலிவரி பாக்ஸை வைத்துவிட்டு சென்று விடலாம்.
- ஒருவேளை நீங்கள் பணிபுரியும் இடத்தில் சக பணியாளரை ஏமாற்ற விரும்பினால், அவர்களது கணினி மௌஸை டேப் போட்டு ஒட்டி விடுங்கள். அதை நகற்ற அவர் சிரமப்படும்போது வீடியோ எடுத்து வைத்து அவரிடம் காண்பியுங்கள்.
- அதே போல உங்கள் சக பணியாளரின் டெஸ்க்டாப்பில் உள்ள வால்பேப்பரை வேடிக்கையானதாக மாற்றலாம். அதை அவர் திறக்கும்போது அருகில் சென்று கிண்டல் அடிக்கலாம்.
- நண்பர்கள் உடன் ஒரு வீட்டில் தங்கியிருந்தால் அதிகாலையில் சீக்கிரமாக எழுந்து வீட்டில் உள்ள அத்தியாவசிய பொருட்களை மறைத்து வைக்கலாம்.
- இவற்றை எல்லாம் நீங்கள் ஏமாற்றும் நபரின் தனிப்பட்ட குணாதிசயங்களை பொறுத்து செய்யவும். அவர்களுக்கு பிடிக்காது என்று நீங்கள் நினைத்தால் கட்டாயம் தவிர்த்துவிடவும். யார் மனதையும் புண்படுத்த வேண்டாம்.
இதையும் படிங்க: தூக்கத்தைப் பற்றி என்ன சொல்கிறது, ஆயுர்வேதம்?