இது குறித்து ஜவஹிருல்லா நமது ஈடிவி பாரத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், 'திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் அமைந்திருக்கும் அணுமின் நிலையத்தில் தரமான உதிரி பாகங்கள் பொருத்தப்படவில்லை, தொழில்நுட்பக் கோளாறு போன்றவைகளால் முதல் அணுஉலை 48 முறையும், இரண்டாம் அணுஉலை 19 முறையும் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த அணுஉலையிலிருந்து உற்பத்தியாகும் கழிவுகளை கையாள்வதற்கு எங்களிடம் தொழில்நுட்ப வசதியில்லை என்று பூவுலகின் நண்பர்கள் தொடுத்த வழக்கில இந்திய அணுசக்தி நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.
இந்நிலையில் அங்கு ஆழ்நில அணுக்கழிவு கருவூலம் அமைக்காமல், அணுஉலை வளாகத்துக்குள்ளேயே அணுக்கழிவுகளை சேமிக்கும் திட்டம் கொண்டுவர உள்ளனர். இது மிகவும் ஆபத்தானது. எனவே இதனை கைவிட வேண்டும் இதற்காக ஜூலை 10ஆம் தேதி நடக்கவிருக்கும் மக்கள் கருத்துக் கேட்பு கூட்டத்தையும் நிறுத்தி வைக்க வேண்டும். இதற்காக ஜூன் 25ஆம் தேதி நெல்லையில் அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்தவுள்ளோம்.
தமிழ்நாட்டில் வரலாறு காணாத வகையில் தண்ணீர் பற்றாக்குறை நிலவிவருகிறது. தண்ணீர் பற்றாக்குறையை போக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க எடப்பாடி அரசு தவறிவிட்டது. எனவே அண்டை மாநில ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியிடம் பேசி தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கொண்டுவர ஏற்பாடு செய்ய வேண்டும். அதேபோல் நெமிலியில் அமைந்திருக்கும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை மேம்படுத்தவது என்று போர்க்கால அடிப்படையில் முதலமைச்சர் பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்