சென்னை: மாநகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்பு மாநகராட்சி ஆணையரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ககன்தீப் சிங் பேடி தலைமையில் இன்று (பிப். 12) நடைபெற்றது.
பதற்றமான வாக்குச்சாவடிகள்
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ககன்தீப் சிங் பேடி, "மாநகராட்சி மற்றும் மாநகர காவல் ஆணையம் சேர்ந்து சென்னையில் 1,139 பதற்றமான வாக்குச்சாவடிகளை தேர்வு செய்துள்ளோம். இந்த இடங்களை கண்காணிக்க 334 தேர்தல் நுண் பார்வையாளர்களை நியமித்துள்ளோம். மேலும் அங்கு லைவ் ஸ்ட்ரீமிங் செய்ய வேண்டும் என மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அந்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதுமட்டுமின்றி வாக்குப்பதிவு முறையாக நடைபெறுகிறதா? என்பதை கண்காணிக்க சென்னை மாநகராட்சியில் மூன்று தேர்தல் நுண் பார்வையாளர்கள் இருப்பார்கள்.
சென்னையில் அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு நேரடியாக கண்காணிக்கப்படும். தபால் வாக்குகள் சரியான நேரத்தில் சென்றடைய வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். நேற்று (பிப். 11) வரை 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தபால் வாக்குகள் அனுப்பப்பட்டுள்ளன.
வழக்கு
சென்னையில் தேர்தல் பரப்புரையின்போது விதிகளை மீறிய 44 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பரப்புரை மேற்கொள்ள 24 மணி நேரத்திற்கு முன்பே தேர்தல் உதவி அலுவலரிடம் அனுமதி வாங்க வேண்டும் என வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாநிலத் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி வாக்குப்பதிவு இயந்திரங்களில் நோட்டா பொத்தான் இடம்பெறாது. இன்று (பிப். 12) முதல் அடுத்த மூன்று நாள்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாநகராட்சி ஊழியர்கள் மட்டுமே பூத் சிலிப் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: IPL 2022 AUCTION: 10 கோடியில் ஹசரங்கா... மயக்கம் போட்டு விழுந்த ஏலம் விடுபவர்!