சென்னை: உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அரசாணையில், கவுர விரிவுரையாளர்களுக்கு மாதம் 20 ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமிக்க அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது என்பதை குறிப்பிட்டுள்ளார். அரசுக்கல்லூரிகளில் காலியாக உள்ள 7198 உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் 5303 கவுர விரிவுரையாளர்கள் மட்டுமே பணி புரிந்து வருகின்றனர். மீதமுள்ள 1895 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், மாணவர்களுக்கு வகுப்பு நடத்துவதில் சிரமமாக உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜூலை 7 ந் தேதி நடைபெற்ற கூட்டத்தில் , ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக உதவிப் பேராசிரியர்களை நேரடி நியமனம் செய்வதற்கு காலதாமதமாகும் என்பதால், மாணவர்களின் நலன் கருதி இடைக்கால நடவடிக்கையாக 2022 -23 ம் கல்வியாண்டில் மண்டல இணை இயக்குனர் வழியாக 1895 கவுரவ விரிவுரையாளர்களை சுழற்சி 1 ல் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் தற்காலிகமாக 11 மாதங்களுக்கு நியமனம் செய்ய முடிவு எடுக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.
இதே போன்று கவுரவ விரிவுரையாளர்களை தேர்வு செய்வதற்கான வழிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. கவுரவ விரிவுரையாளர் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்புகள்,. விண்ணப்பங்கள் சார்ந்த மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநரால் மட்டுமே அறிவிக்கப்பட வேண்டும். மானியக்குழுவின் (UGC) ஒழுங்குமுறைகள் 2018 ன் படி உரிய கல்வித் தகுதி பெற்றவர்கள் மட்டுமே தகுதியுடையவராக கருத்தப்படுவர்.
நியமனம் செய்யப்படும் கவுரவ விரிவுரையாளர்கள் அந்தக் கல்வியாண்டிற்கு மட்டும் தற்காலிகமாக நியமனம் செய்யப்படுகின்றனர் என்ற விபரம் தெரிவிக்கப்பட வேண்டும். நியமனம் செய்வதற்கான குழுவில் சார்ந்த மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் தலைவராகவும், உறுப்பினர்களாக மண்டலத்தில் உள்ள மூன்று கல்லூரி முதல்வர்கள் , சார்ந்த கல்லூரி முதல்வர் ,பணியில் மூத்த ஆசிரியர் அல்லது முதல்வர் (பட்டியல் இனத்தைச் சார்ந்த இணை பேராசிரியர்) நிலைக்கு குறையாமல் இருக்க வேண்டும்.
ஒரே மதிப்பெண் கொண்ட இருவர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கின்ற போது அவர்களுள் கல்லூரியில் இருந்து 20 அல்லது 25 கிலோமீட்டர் தொலைவில் வசிப்பிடம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மதிப்பெண் மற்றும் இருப்பிடம் இரண்டும் ஒன்றாக உள்ள நபர்களில் வயதில் மூத்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
கவுரவ விரிவுரையாளர்கள் டிசம்பர் 2022 முதல் 2023 ம் ஆண்டு ஏப்ரல் வரையில் 5 மாதங்களுக்கு மட்டுமே நியமிக்கப்படுவர் எனவும், அவர்களுக்கான ஊதியத்திற்கு 18 கோடியே 95 லட்சம் நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.