சென்னை: திண்டுக்கல் மாவட்டம் அவிலிப்பட்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் சூர்யமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், அதிமுக பொதுச்செயலாளராக பதவி வகித்து வந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு பொதுச்செயலாளர் பதவி கலைக்கப்பட்டது. இந்நிலையில், கட்சியின் சட்ட திட்டத்தின்படி, கட்சியின் அனைத்து அடிப்படை உறுப்பினர்களும் வாக்களித்து பொதுச்செயலாளர் பதவி தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற விதியை மாற்றவோ? திருத்தவோ? முடியாது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிக்கு உட்கட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக, நிர்வாகிகளுக்கான தேர்தல் நடத்தப்படவில்லை. தேர்தல் நடத்தாமல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கி கட்சியை நடத்தி வருகின்றனர்.
புதிய பொதுச்செயலாளர் பதவி உட்பட நிர்வாகிகளுக்கான உட்கட்சி தேர்தல் நடத்த கோரி தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உட்கட்சி தேர்தல் நடத்தப்படும்வரை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்க தடை விதிக்க வேண்டும். கட்சியின் செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்த இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின்போது கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், 2013ஆம் ஆண்டு வரை கட்சியின் உறுப்பினராக இருந்த சூர்யமூர்த்தி அதன் பின்னர் உறுப்பினர் படிவத்தை புதுப்பிக்கவில்லை. தற்போது உள்கட்சி விவகாரம் தொடர்பாக வழக்கு தொடர அவருக்கு தார்மீக ரீதியில் எந்த உரிமையும் இல்லை எனவும் வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களும் முடிந்து, வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், வழக்கு தொடர மனுதாரருக்கு அடிப்படை முகாந்திரம் இல்லை என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவிட்டார்.