இந்திய மருத்துவம், ஓமியோபதி துறையின் கீழ் இயங்கி வரும் சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி, யுனானி ,யோகா, இயற்கை மருத்துவம் ஆகிய படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் நடைபெறவுள்ளதாக இந்திய மருத்துவம், ஓமியோபதி துறை அறிவித்தது.
இந்த ஆண்டிற்கான இயற்கை மருத்துவம், யோகா படிப்பில் மாணவர்கள் சேருவது குறித்து இந்திய மருத்துவம், ஓமியோபதி துறையின் தமிழ்நாடு இயக்குநர் கணேஷ் கூறுகையில், "ஐந்தாண்டு 6 மாதங்கள் கால அளவு கொண்ட இயற்கை மருத்துவம், யோகா பட்டப்படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான அறிவிப்பு ஜூன் 30ஆம் தேதி வெளியிடப்படுகிறது. அதனைத் தொடர்ந்து ஜூலை ஒன்றாம் தேதி முதல் மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும்.
மாணவர்கள் நேரடியாகவும், மக்கள் நல்வாழ்வுத் துறையின் இணையதளமான www.tnhealth.org என்ற இணையத்தில் இருந்தும் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இயற்கை, யோகா பட்டப்படிபிற்கு அரசு மருத்துவக் கல்லூரியில் 60 இடங்கள் உள்ளன. அதேபோல் தமிழ்நாட்டில் உள்ள 7 தனியார் மருத்துவக் கல்லூரியில் 550 இடங்கள் உள்ளன. தனியார் மருத்துவக் கல்லூரியில் அரசு விதிகளின்படி 65 விழுக்காடு இடங்கள் ஒற்றை சாளர கலந்தாய்வு மூலம் இந்திய மருத்துவம், ஓமியோபதி துறையால் நிரப்பப்படும்.
இந்தப் பட்டப்படிப்பில் மாணவர்கள் சேருவதற்கு பன்னிரண்டாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். ஆனால் அதே நேரத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். நீட் தேர்வு மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி ஆகிய படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே சேர்க்கை நடைபெறவுள்ளது.
அரசு இதற்கான அறிவிப்பை விரைவில் அறிவிக்கும். இயற்கை மருத்துவம், யோகா படிப்பை முடிக்கும் மருத்துவர்களுக்கு தற்போது வேலைவாய்ப்பு அதிக அளவில் பெருகி வருகிறது" என்றார்.