பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான சிறப்பு, பொது, தொழிற்கல்வி மாணவர்களுக்கான கலந்தாய்வு நிறைவுபெறும் நிலையில் உள்ளது. இந்தக் கலந்தாய்வில் சுமார் 60 ஆயிரம் பொறியியல் இடங்கள் காலியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் வழக்கம்போல் நடப்பு கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு எழுதித் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கும், கலந்தாய்வில் கலந்துகொள்ளாதவர்களுக்கும் துணைக் கலந்தாய்வு நடைபெறும் தேதியை தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.
அதன்படி, பிஇ, பி.டெக் பொறியியல் படிப்புகளுக்கான பொது கலந்தாய்வு, தாெழிற்கல்விக் கலந்தாய்வு - ஆறு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கான சிறப்புக் கலந்தாய்வில் நிரப்பப்படாத இடங்களுக்கு துணை கலந்தாய்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் இணையதளம் வாயிலாக இன்றுமுதல் வருகின்ற 17ஆம் தேதிவரை www.tneaonline.org என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கு விண்ணப்பிக்காத மாணவர்களும் இந்தக் கலந்தாய்வில் விண்ணப்பித்து இடங்களைப் பெறலாம். கலந்தாய்விற்கு விண்ணப்பிக்கும்போதே தங்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். மாணவர்கள் தங்களுக்குச் சான்றிதழ் சரிபார்ப்புக்கான உதவி மையத்தை விண்ணப்பப் பதிவின்போது இணையதளத்திலேயே தேர்வு செய்துகொள்ள வேண்டும்.
சிறப்புக் கலந்தாய்விற்கான தரவரிசைப் பட்டியல் வருகின்ற 19ஆம் தேதி வெளியிடப்பட்டு, ஆன்லைன் மூலம் கலந்தாய்வு 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெறும். மாணவர்களுக்கான உத்தேச ஒதுக்கீட்டு ஆணை 22ஆம் தேதி வெளியிடப்படும். தங்களுடைய உத்தேச ஒதுக்கீட்டு ஆணையை மாணவர்கள் 22ஆம் தேதி உறுதிசெய்ய வேண்டும், இறுதி ஒதுக்கீட்டு ஆணை 23ஆம் தேதியன்று வெளியாகும் என அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: இன்ஜினியரிங் கவுன்சிலிங்: 50 விழுக்காடு இடங்கள் கூட நிரம்பவில்லை!