சென்னை: சென்னை ஐஐடியில் பிஎஸ் டேட்டா சயின்ஸ் முதல் பேட்ச் மாணவர்கள் தங்கள் பட்டப்படிப்பை முடிக்கும் நிலையில் உள்ளதால், அவர்களைப் பணியமர்த்துதல் மற்றும் உள்ளகப் பயிற்சி வாய்ப்புகளுக்காக பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் சென்னை ஐஐடி பிஎஸ் குழுவினர், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்களை அணுகிப் பேச்சு நடத்தி உள்ளனர். அடுத்த 10 ஆண்டுகளில் 11.2 மில்லியன் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். ஒரு டிப்ளமோவை முடித்துள்ள மாணவர்கள் போர்டு அனலிட்டிக்ஸ், கேபிஎம்ஜி, ஆதித்ய பிர்லா, ரெனால்ட் நிசான், வுநெட், பக்மேன், ஆசியா பசிபிக், ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட நிறுவனங்களில் ஏற்கனவே உள்ளகப் பயிற்சியை மேற்கொண்டுள்ளனர்.
பிஎஸ் டேட்டா சயின்ஸ் குறித்து சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கூறும்போது, "நாடு முழுவதும் உள்ள மாணவர்களை உள்ளடக்கிய முறையில் வாய்ப்பு அளிக்கும் முதல்படியாக தரவு அறிவியலில் பி.எஸ். பட்டப்படிப்பு இருக்கிறது. ஒவ்வொரு பாடத் திட்டத்திலும் நேரடிப் பயிற்சி, மாணவர்களுக்கு வலுவான அடித்தளத்தை உருவாக்குதல், அதிநவீனத் தொழில்நுட்பம் மற்றும் தலைப்புகளில் மாணவர்களின் திறனை வெளிப்படுத்துதல், கடுமையான மதிப்பீட்டு முறைகள் போன்றவற்றால் வேலைவாய்ப்பு சார்ந்த திட்டமாக இதனை உருவாக்கியுள்ளோம். இதன்மூலம் அடுத்த 10 ஆண்டுகளில் 11.2 மில்லியன் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்" என தெரிவித்தார்.
டிப்ளமோவில் 4,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பட்டப்படிப்பில் 60 பேரைக் கொண்ட முதல் பேட்ச் மாணவர்கள் உள்பட 16,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்போது இந்த திட்டத்தில் படித்து வருகின்றனர். இந்தப் படிப்புக்காக மாணவர்கள் ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிக்கவோ, தங்களைத் தயார் செய்து கொள்ளவோ அவசியமில்லை. மாணவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகளைப் படிக்கலாம் என பல்கலைக் கழக மானியக் குழு ஒப்புதல் அளித்திருப்பதன் மூலம் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும், பொறியியல் கல்லூரிகளிலும் பல்வேறு பட்டப் படிப்புகளைப் படித்து வரும் லட்சக்கணக்கான மாணவர்களுக்கும் படிக்கும் வாய்ப்பு இருக்கிறது. இதனால் புரோகிராமிங், டேட்டா சயின்ஸ் ஆகிய படிப்புகளிலும் மாணவர்கள் நன்கு தயார் செய்து கொள்ள முடியும். பொருளாதார ரீதியாக பின்தங்கிய பின்னணியைக் கொண்ட மாணவர்களுக்கும் 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உதவித் தொகை வழங்கப்படுகிறது. 4,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இவ்வாறு உதவித் தொகையைப் பெற்று வருகின்றனர்.
பத்தாம் வகுப்பில் கணிதம், ஆங்கிலம் ஆகிய பாடங்களைப் படித்து முடித்தவர்கள் இதில் விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள். பன்னிரண்டாம் வகுப்பில் படித்துவரும் மாணவர்கள் தகுதித் தேர்வு எழுதி பள்ளியில் படிக்கும்போதே ஐஐடிஎம்-ல் மாணவர் சேர்க்கைக்கான கடிதத்தைப் பெற்றுக் கொள்ளலாம். எந்த வயதை உடையவர்களும், எந்தப் பின்னணி அல்லது பிரிவைச் சேர்ந்தவர்களும் இப்படிப்பிற்கு விண்ணப்பித்து பாடங்களைக் கற்கலாம். கலை, அறிவியல், வணிகவியல், பொருளாதாரம், மருத்துவம், சட்டம், பொறியியல் போன்ற பாடப்பிரிவுகளுடன் தொடர்புடைய 18 முதல் 75 வரை வயதுடையோர் தற்போது மாணவர்களாக இருந்து வருகின்றனர்.
சென்னை ஐஐடி நடத்தும் நான்கு அடிப்படையான பாடங்களை நான்கு வாரங்கள் கற்றுக் கொண்டு மாணவர்கள் தேர்வு எழுதி தகுதிபெறும் விதமாக இந்தப் பாடத் திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. குறைந்தபட்சம் 50-க்கும் மேற்பட்ட மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெறுவோர் இதில் சேர்த்துக் கொள்ளப்படுவார். இடங்களின் எண்ணிக்கை இவ்வளவுதான் என வரையறை ஏதும் இல்லாததால், தகுதிபெறும் அனைத்து மாணவர்களும் இப்படிப்பில் கல்வி கற்க முடியும்.
பாடத்திட்டத்தின் தொடக்கமாக புரோகிராமிங் அண்ட் டேட்டா சயின்ஸ் பாடங்களில் அடிப்படை அம்சங்களும், டிப்ளமோ நிலையில் பாடங்கள் நடத்தப்படும். டிப்ளமோ இன் புரோகிராமிங் படிப்பில், டேட்டா ஸ்ட்ரக்சர்ஸ் அண்ட் அல்காரிதம்ஸ், ஜாவா புரோகிராமிங், வெப் அப்ளிகேஷன் டெவலப்மெண்ட் (Front and Back end), டேட்டாபேஸ் மேனேஜ்மெண்ட், லினக்ஸ் புரோகிராமிங் குறித்த அறிமுகம் மற்றும் இரு முழுஅளவிலான மேம்பாட்டுத் திட்டங்கள் ஆகியவை இடம்பெறும்.
டேட்டா சயின்ஸ் பாடத்தில் டிப்ளமோ வகுப்பில் மாணவர்களுக்கு இயந்திரக் கற்றல் (Machine learning) குறித்த அடிப்படைகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. தரவு சேகரிப்பு, நிறுவனம், தரவு சுத்திகரிப்பு, பகுப்பாய்வு, அனுமானித்தல் போன்ற வணிக ரீதியான அம்சங்கள் மாணவர்களுக்கு விளக்கப்படுகின்றன. இவற்றுடன் மாணவர்கள் இப் பாடங்களை எந்த அளவுக்கு கற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள உதவும் வகையில் வணிகத் தரப்பு (business side), இயந்திரக் கற்றலை செயல்படுத்துதல் (ML implementation) ஆகிய இரு செயல்திட்டங்கள் (projects) அமைந்துள்ளன.