கடந்த 2017ஆம் ஆண்டு தடைசெய்யப்பட்ட குட்கா போதைப்பொருளை சபாநாயகர் அனுமதி இல்லாமல் சட்டப்பேரவைக்குள் எடுத்துச் சென்றதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு எதிராக சட்டப்பேரவை உரிமைக் குழு நோட்டீஸ் அனுப்பியது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, நோட்டீஸில் அடிப்படைத் தவறுகள் உள்ளதாகக் கூறி அதை ரத்து செய்ததுடன், இந்த விவகாரத்தில் உரிமை மீறல் இருப்பதாகக் கருதினால் மீண்டும் நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்கலாம் எனவும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதையடுத்து, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கூடிய உரிமைக் குழு, மீண்டும் நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து ஸ்டாலின் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, மீண்டும் நோட்டீஸை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தார்.
தொடர்ந்து, தனி நீதிபதி புஷ்பா சத்தியநாராயணாவின் தீர்ப்பை எதிர்த்து சட்டப்பேரவை செயலர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், மஞ்சுளா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (ஏப்.19) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ’தற்போதும் உரிமைக்குழு நீடிக்கிறதா?’ என்ற கேள்வியை முன்வைத்தனர்.
அதற்கு சட்டப்பேரவை செயலர் சார்பில் மூத்த வழக்கறிஞர் சோமைய்யாஜி ஆஜராகி, ’இதே அரசு அமைந்தால் நீடிக்கும்’ என்று தெரிவித்தார். இதையடுத்து இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மேல்முறையீடு மனு குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 பேரும், பாஜகவில் இணைந்த கு.க.செல்வமும் பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: குட்கா அரசின் ஆட்டம் முடியும்! - மு.க.ஸ்டாலின் டிவிட்!