தமிழ்நாடு 16ஆவது சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக எம்.எல்.ஏ., கு.பிச்சாண்டி நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, சட்டப்பேரவையின் சபாநாயகர் யார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்தது. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் பதவிக்கு மே 11ஆம் தேதி மதியம் 12 மணி வரை, வேட்புமனுத் தாக்கல் செய்யலாம் என சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசன் அறிவித்தார். சபாநாயகர், துணை சபாநாயகருக்கான தேர்தல் மே 12ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவித்திருந்தார்.
திமுக சார்பில் சட்டப்பேரவைத் தலைவர் பதவிக்கு மு. அப்பாவு போட்டியிடுவதற்கான வேட்புமனுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்து, சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசனிடம் அளித்தார். துணை சபாநாயகர் பதவிக்கு கு. பிச்சாண்டியின் வேட்புமனுவை நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் சட்டப்பேரவை செயலாளரிடம் அளித்தார்.
சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் மதியம் 12 மணிக்குள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், 12 மணி வரை சபாநாயகர் பதவிக்கு அப்பாவு, துணை சபாநாயகர் பதவிக்கு கு.பிச்சாண்டியும் மட்டுமே வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர்.
பதவியேற்றார் அப்பாவு
இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையின் இரண்டாவது கூட்டம் இன்று (மே.12) காலை கூடியதும், தற்காலிக சபாநாயகர் பிச்சாண்டி சபையை நடத்தினார். அப்போது சபாநாயகராக அப்பாவு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்தார். அவரை சபாநாயகர் இருக்கைக்கு வந்து அமரும்படி அழைப்பு விடுத்தார். சபாநாயகர் இருக்கையில் இருந்து கு.பிச்சாண்டி இறங்கிய பின்னர், சபைமரபு படி அவை முன்னவர் துரைமுருகன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் சபாநாயகரை அழைத்துச் சென்று அவரது இருக்கையில் அமர வைத்தனர்.
சபாநாயகர் அப்பாவுக்கு வாழ்த்துரை
துணைத்தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்த கு. பிச்சாண்டியை, சட்டப்பேரவை துணைத் தலைவராக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். இதைத் தொடர்ந்து, அவை முன்னவர் துரைமுருகன் வாழ்த்துரையாற்றினார். அப்போது, ’வரலாற்று சிறப்பு மிக்க ஆசனத்தில் அமர்ந்துள்ளீர்கள். அமைச்சர்கள் எத்தனை பேர் இருந்தாலும் கூட சபாநாயகர், முதலமைச்சர் பெயர் மட்டும் தான் பேரவையின் பலகையில் இருக்கும்’ என்றார்.
அடுத்ததாக வாழ்த்துரையாற்றிய எதிர்கட்சி தலைவர் பழனிசாமி, 'பெரும்பான்மை உறுப்பினர்கள் உள்ள கட்சியின் சார்பில் தேர்வு செய்யப்பட்டாலும் சபாநாயகர் அனைவருக்கும் பொதுவானவர். ஆசிரியராக சபாநாயகர் பணியாற்றியுள்ளதால் அனைவரையும் சமமாக நடந்த வேண்டும்' என்றார்.