சென்னை: தமிழ்நாடு பத்திரப்பதிவுத்துறையில் 2016ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை, மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாக, அறப்போர் இயக்கம் சார்பில் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் கடந்த மாதம் புகார் அளிக்கப்பட்டது. அதில், "கடந்த 2011-12ஆம் ஆண்டில் பிஏசிஎல் என்ற நிறுவனம் பல்வேறு மாநிலங்களில் ரியல் எஸ்டேட் என்ற பெயரில் மோசடி செய்து, பொதுமக்களிடம் பணம் பறித்தது. நிலம் வழங்குவதாகக் கூறி பல கோடி ரூபாயை மோசடி செய்துள்ளது. இந்த மோசடி தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இதுதொடர்பாக கமிட்டி ஒன்றை அமைத்த உச்ச நீதிமன்றம், பிஏசிஎல் நிறுவனத்தின் நிலங்களை விற்பனை செய்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க உத்தரவிட்டது. இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றமும், சிபிஐயும் விசாரிப்பதால், பிற மாநில அரசுகள், பிஏசிஎல் நிறுவனத்தின் நிலங்களை விற்பனை செய்யத் தடை விதித்தது.
அவ்வாறு உச்ச நீதிமன்றம் தடை விதித்த 5,300 ஏக்கர் நிலங்களை தமிழ்நாடு பத்திரப்பதிவுத்துறை அலுவலர்கள் மோசடியாக விற்பனை செய்ய உதவியுள்ளனர். பத்திரப்பதிவுத்துறை கூடுதல் ஐஜி சீனிவாசன் உள்பட இதில் சம்பந்தப்பட்ட அனைத்து அலுவலர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, பிஏசிஎல் சொத்துகளை முறைகேடாக விற்க உதவிய புகாரில் பத்திரப்பதிவு கூடுதல் ஐஜி சீனிவாசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த நிலையில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட கூடுதல் ஐஜி சீனிவாசன் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் உரிய ஆதாரங்களை திரட்டும் பணியில் ஈடுபட உள்ளதாகவும், அதனடிப்படையில் கூடுதல் ஐஜி சீனிவாசனை கைது செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் கூடுதல் ஐஜி சீனிவாசனை அழைத்து விசாரித்தால் முன்னாள் அமைச்சர்கள், பத்திரப்பதிவு அலுவலர்கள் பலரும் சிக்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிகிறது.
இதையும் படிங்க: சென்னையில் 300ஆண்டுகள் பழமை வாய்ந்த சிலைகள் பறிமுதல்