சென்னை: தீவுத்திடலைச் சுற்றி ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்கு எதிராக டி.என்.பி.எஸ்.சி. முன்னாள் உறுப்பினர் பாலுசாமி தாக்கல் செய்துள்ள வழக்கு நாளை (டிச.01) விசாரிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்கு எதிராக மருத்துவர் ஸ்ரீஹரீஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், கார் பந்தயம் நடத்த ராணுவம் மற்றும் கடற்படையிடம் பெற்ற அனுமதி குறித்த ஆவணங்களைத் தாக்கல் செய்யத் தமிழக அரசிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வில் இன்று (நவ.30) விசாரணைக்குப் பட்டியலிடப்படவில்லை.
இந்நிலையில் முன்னாள் அரசு வழக்கறிஞரும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முன்னாள் உறுப்பினருமான ஏ.வி.பாலுசாமி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன்பு இது தொடர்பாக, இதே கோரிக்கையுடன் மனு தாக்கல் செய்திருப்பதாகவும், அதை அவசர வழக்காக இன்று பிற்பகலில் விசாரிக்க வேண்டுமென முறையீடு முன்வைக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், பாலுசாமியின் வழக்கை நாளை (டிச.1) விசாரிப்பதாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பாலுசாமி தாக்கல் செய்துள்ள மனுவில், 'தெரு பந்தயமாக நடத்துவதாக கூறும் அரசு, அதை நடத்துவதற்குப் பொதுமக்களிடம் ஒப்புதல் கேட்கவோ? அல்லது இந்த பந்தயம் நடத்த வேண்டுமெனப் பொதுமக்களிடம் விருப்பம் கோரவோ? இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு செலவில் இது போன்ற சாகச விளையாட்டுகளை நடத்துவது சட்டவிரோதம் எனவும், சாலையில் நடத்துவதால் சிறிது கவனக்குறைவு ஏற்பட்டாலும் உயிரிழப்பு உள்ளிட்டவை ஏற்பட வாய்ப்புள்ளது எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
தீவுத்திடலைச் சுற்றி பந்தயம் நடத்துவதால் பொதுமக்கள் உள்ளிட்டோருக்கு அசவுகரியம் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வு கேட்டால் நிதியில்லை எனக் கூறும் அரசு, மக்களுக்கு நன்மை இல்லாத பொழுதுபோக்கான இந்த திட்டத்திற்கு ரூ.40 கோடி ஒதுக்கியுள்ளதாகவும், பந்தயம் நடத்துவதற்காக ஏற்கனவே, செலவு செய்து அமைக்கப்பட்டுள்ள இருங்காட்டுக்கோட்டை வளாகத்தில் இந்த பந்தயத்தை நடத்தினால், தேவையற்ற செலவுகள் அரசுக்கு ஏற்படுவதைத் தடுக்கலாம். எனவே, தீவுத்திடலைச் சுற்றி ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்தத் தடை விதித்து உத்தரவிட வேண்டும்' என அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வில் நாளை (டிச.01) விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சென்னையை வெளுத்தெடுக்கும் மழை. .வெள்ளக்காடாக மாறிய சாலைகள்!