சென்னை: முத்தியால்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஜமால் என்பவரின் வீடு மற்றும் செல்போன் கடையில் கடந்த 13 ஆம் தேதி என்ஐஏ அதிகாரிகள் எனக் கூறி ஏழு பேர் சோதனை மேற்கொண்டு, 2 கோடியே 30 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இது குறித்து போலீசார் தனிப்படைகள் அமைத்து என்ஐஏ அதிகாரிகள் எனக் கூறி கொள்ளையடித்த நபர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்த வழக்கு தொடர்பாக சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் பாஜக நிர்வாகியான வேலு என்கிற வேங்கை வேந்தன் உட்பட ஆறு பேர் சரணடைந்தனர். அவர்கள் ஆறு பேரையும் முத்தியால்பேட்டை போலீசார் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர்.
இது சம்பந்தமாக சென்னை மண்ணடி பகுதியில் ஜிம் பயிற்சியாளராக இருக்கும் முகமது பாசில் என்பவரை முத்தியால்பேட்டை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து சுமார் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் அளவில் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இவரை தொடர்ந்து கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட ஜமாலின் செல்போன் கடையில் பணியாற்றி வந்த சித்திக் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் ஜமாலிடம் அதிக பணம் புழங்குவதாக பாஜக நிர்வாகி வேலுவிடம் தெரிவித்தார். கொள்ளையடிக்க சித்திக் சதி திட்டம் தீட்டினார் என்பது தெரியவந்தது.
ஏற்கனவே எட்டு பேர் கைது செய்த நிலையில், ஒன்பதாவது நபராக சித்திக் சகோதரர் அலி என்பவரை நேற்று (டிச. 26) போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து மேலும் 14 லட்சம் ரூபாய் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
2 கோடியே 30 லட்சம் ரூபாய் பணத்தில் இதுவரை ஒரு கோடி 64 லட்சம் ரூபாய் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: அரசு வேலை ஆசை - ரூ.2 லட்சம் மோசடி செய்த உதயநிதி நற்பணி மன்றத் தலைவர்!