சென்னை நந்தனம் பகுதியில் அமைந்துள்ள ஒய்.எம்.சி.ஏ உடற்கல்வியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரக்கூடிய 23 வயதான மாணவி ஒருவர் சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் ஒய்.எம்.சி.ஏ உடற்பயிற்சி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருவதாகவும், இக்கல்லூரியின் முதல்வரான ஜார்ஜ் ஆபிரகாம் என்பவர் வகுப்பில் தொடர்ச்சியாக ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்து வருவதாகவும் மாணவி குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், சில மாதங்களாகவே முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் செல்போனில் தொடர்புகொண்டு தொடர்ந்து ஆபாசமாக பேசி தொல்லை கொடுத்து வருவதாகவும் புகாரில் தெரிவித்திருந்தார். இதனால், தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வரும் கல்லூரியின் முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகார் தொடர்பாக கல்லூரி முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் மீது பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் டிசம்பர் 2 ஆம் தேதியே சைதாப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால், வழக்குப்பதிவு செய்து பெயரளவில் விசாரணை மேற்கொண்டு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என ஒய்.எம்.சி.ஏ. மாணவர்கள் கடந்த வாரம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் பாலியல் ரீதியாக மாணவிக்கு தொந்தரவு கொடுத்த விவகாரத்தில், மேலும் சில ஆடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. இந்த ஆடியோவில் முதல்வர் மாணவியிடம் தவறான நோக்கத்தோடு பேசுவதும், அதற்கு மாணவி தவறு என சுட்டிக்காட்டி பேசியபோது, ’விருப்பம் இல்லை என்றால் தொடர்ந்து பேச மாட்டேன்’ எனப் பேசிய உரையாடல்களும் பாலியல் தொந்தரவு கொடுத்தது தொடர்பான குற்றச்சாட்டுக்கு உறுதியான ஆதாரமாக வெளியாகி உள்ளது.
அதேபோல, அந்த கல்லூரியில் பணியாற்றிய பெண் ஆசிரியர் ஒருவருக்கும் இதேபோன்று அவர் பேசும் ஆடியோவும் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து நடிகை காயத்ரி ரகுராம் தனது ட்விட்டரில் பக்கத்தில் பதிவிட்டு எதிர்ப்பை தெரிவித்துள்ளார். பள்ளி செல்லும் குழந்தையை எவ்வாறு இந்த கண்ணோட்டத்தில் பார்க்க முடியும் எனவும் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதையும் படிங்க: குட்கா தடை மீதான தனித்தீர்மானம் சட்டசபையில் கொண்டு வரப்படும் - அமைச்சர் மா.சு உறுதி!