சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில் 58 பேருக்கும் சென்னை மாவட்டத்தில் 59 பேர் உட்பட தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 139 நபர்களுக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் கடந்த சில தினங்களாக வேகமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மேலும் கல்வி நிறுவனங்களில் கரோனா வைரஸ் தொற்றுப் பரவலாக உள்ளதால் அந்தப் பகுதிகள் நோய்த்தொற்றுப் பரவல் பகுதியாக அறிவிக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொது சுகாதாரத் துறை இயக்குநரகம் ஜூன் 1ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவல்களின் படி, 'கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 14 ஆயிரத்து 49 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் தமிழ்நாட்டில் இருந்த 137 நபர்களுக்கும் அமெரிக்காவிலிருந்து வந்த இரண்டு நபர்களுக்கும் என 139 நபர்களுக்குப் புதிதாக கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 6 கோடியே 54 லட்சத்து 63 ஆயிரத்து 66 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இதன் மூலம் தமிழ்நாட்டில் 34 லட்சத்து 56 ஆயிரத்து 613 பேர் கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது கண்டறியப்பட்டது.
அவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 629 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் குணமடைந்த 52 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 16 ஆயிரத்து 959 என உயர்ந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் கரோனா வைரஸ் தொற்றுப்பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் புதிதாக 59 நபர்களுக்கும், செங்கல்பட்டில் 58 நபர்களுக்கும், கோயம்புத்தூரில் 6 நபர்களுக்கும், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் தலா நான்கு நபர்களுக்கும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மூன்று நபர்களுக்கும் மதுரை, சிவகங்கை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் தலா இரண்டு நபர்களுக்கும் விமானம் மூலம் வந்த இரண்டு நபர்கள் என 139 பேருக்குப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
மே மாதம் 31ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தில் 1222 ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ததில் 46 பேருக்கும், சென்னை மாவட்டத்தில் 1658 நபர்களுக்கும் பரிசோதனை செய்ததில் 44 நபர்களுக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் குறைந்து வந்த நோய்த்தொற்று விகிதம் தற்போது சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மூலம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது’ எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தனியார் கல்லூரியில் 118 பேருக்கு கரோனா - அமைச்சர் ஆய்வு!