சென்னை: சட்டப்பேரவையில் இன்று (ஏப்.27) சட்டத் துறை, செய்தி மற்றும் விளம்பரத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில், செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் 15 புதிய அறிவிப்புகளை அமைச்சர் அமைச்சர் மு.பெ. சாமிநாதன் வெளியிட்டார். அவை பின்வருமாறு,
- பத்திரிகையாளர் ஓய்வூதிய திட்டத்துக்கான பணிக்கொடை மற்றும் பணிக்கால ஆண்டு வருமான உச்சவரம்பு 3 லட்சத்திலிருந்து ரூபாய் 4 லட்சமாக நடப்பு நிதியாண்டில் உயர்த்தப்படும்.
- பத்திரிக்கையாளர் நல நிதியிலிருந்து வழங்கப்படும் மருத்துவ உதவித் தொகை 2 லட்சத்திலிருந்து ரூபாய் 2 லட்சத்து 50 ஆயிரமாக நடப்பு நிதி ஆண்டின் முதல் உயர்த்தப்படும்.
- தமிழில் முதல் நாவல் எழுதிய மாயூரம் முன்சீப் வேதநாயகம் அவர்களுக்கு மயிலாடுதுறையில் ரூபாய் மூன்று கோடி மதிப்பீட்டில் அரங்கம் மற்றும் சிலை அமைக்கப்படும்.
- வேலூர் மாநகரத்தில் அமைந் துள்ள அண்ணா கலையரங்கத்தினை அண்ணா பல்நோக்கு கலையரங்கமாக ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் மாற்றி புதிதாக கட்டப்படும்.
- தர்மபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள அதியமான் கோட்டம் ரூபாய் ஒரு கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும்.
- செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மண்டபங்களில் அமர்ந்து போட்டித் தேர்வுக்கு தயார் செய்யும் மாணவர்களின் வசதிக்காக முதற்கட்டமாக 10 மணி மண்டபங்களில் ரூபாய் ஒரு கோடி மதிப்பீட்டில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்.
- செய்தி மக்கள் தொடர்புத் துறையில் உள்ள சுதந்திர போராட்ட வீரர்கள், மொழிப்போர் தியாகிகள், தமிழ் அறிஞர்கள் முக்கிய தலைவர்களின் மணிமண்டபங்கள், நினைவகங்கள், அரங்கங்கள் ஆகியவற்றில் அவர்களின் வாழ்க்கை வரலாறு ஒளி படத்தொகுப்புகள் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டு விரைவு குறியீடு முறையில் காணவும் மேலும் அவர்களைப்பற்றிய குறும்படங்கள் ஒளிபரப்பு ஏதுவாக முதல்கட்டமாக 15 இடங்களில் அகண்ட திரை தொலைக்காட்சி எல்இடி டிவி நிறுவப்படும். மேலும் 360 டிகிரியில் படம் எடுத்து சமூக ஊடகங்கள் மற்றும் பல இடங்களில் பொதுமக்கள் கண்டு பயன்பெறும் வகையில் பதிவேற்றம் செய்தல் உள்ளிட்ட பணிகள் ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
- அரசின் செய்திகள் மற்றும் திட்டங்கள் குறித்த விபரங்கள் உடனுக்குடன் பொது மக்களை சென்றடையும் வகையில் முதல் கட்டமாக பொது மக்கள் கூடும் முக்கிய 10 பேருந்து நிலையங்களில் மின் சுவர்கள் உருவாக்கப்பட்டு ஒளிபரப்பப்படும்.
- தமிழக அரசு அச்சகத்தில் நவீன அச்சு இயந்திரங்கள் ரூபாய் 1 கோடியே 80 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும்.
- தமிழ்நாடு திரைப்படப் பிரிவின் ஊடக மையத்திற்கு புதிய நவீன தொழில் நுட்ப கருவிகள் கொள்முதல் செய்து ரூபாய் 14 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
- தமிழ்நாடு திரைப்படப் பிரிவின் எண்மிய மின்னனு வீடியோ ஆவணக் காப்பக பணியில் மீதமுள்ள 3700 கேசட்டுகள் எண்மியமாக்கப்படும்.
- தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தை உலக தரத்திற்கு உயர்த்திட, முதல் கட்டப் பணிகளுக்கு ரூபாய் 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
- தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் புனரமைப்பு பணிகள் ரூபாய் 5 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
- தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன வளாகத்தில் மாணவ மாணவியர் மற்றும் பணியாளர்களுக்கு உணவு அருந்தும் அறை ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
- தமிழ் திருமுறைகள் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளர்களுக்கு கருணாநிதி பெயரில் கலைஞர் கலைத்துறை வித்தகர் என்ற விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படும் விருதாளருக்கு ரூபாய் 10 லட்சம் மற்றும் நினைவு பரிசு வழங்கப்படும்.
இதையும் படிங்க: அரசு அச்சக பணியாளர்களுக்கு புதிய குடியிருப்புகள் - அமைச்சர் மு.பெ. சாமிநாதன்