சென்னை மெட்ரோ ரயில் சேவையில் திடீர் மாற்றம்! என்ன காரணம? - today loatest news
Chennai Metro Train: மிக்ஜாம் புயல் காரணமாக நாளை 05.12.2023 (செவ்வாய்க்கிழமை) ஒரு நாள் மட்டும் ஞாயிற்றுக்கிழமை நேர அட்டவணையின் படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
Published : Dec 4, 2023, 8:31 PM IST
சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. இன்று புயல் வட-வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் நிலையில் தொடர்ந்து கன மழையானது பெய்து வருகிறது. இந்த மிக்ஜாம் புயல் நாளை டிசம்பர் 5ஆம் தேதி நெல்லூர் - மசூலிப்பட்டினம் இடையே கரையைக் கடக்கக் கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும், சென்னையில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து குடியிருப்புப் பகுதிகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில், வழக்கம்போல ரயில் சேவை இருக்கும் என்றும் மழை காரணமாகக் குறிப்பிட்ட வழித்தடங்களில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.
அதில், "மிக்ஜாம் புயல் காரணமாக நாளை 05.12.2023 (செவ்வாய்க்கிழமை) ஒரு நாள் மட்டும் ஞாயிற்றுக்கிழமை நேர அட்டவணையின் படி மெட்ரோ ரயில்கள் இயங்கும். நாளை (டிச 05) மிக்ஜாம் புயல் காரணமாகத் தமிழ்நாடு அரசு பொது விடுமுறை அறிவித்ததைத் தொடர்ந்து, சென்னை மெட்ரோ ரயில்கள் புதிதாகத் திருத்தி அமைக்கப்பட்ட ஞாயிற்றுக்கிழமை நேர அட்டவணையின் படி இயக்கப்படும். அவை பின்வருமாறு,
- காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
- காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
- மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
- இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
மெட்ரோ ரயில் பயணிகள் இச்சேவையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், புயல் மற்றும் கனமழையின் காரணமாக நாளை (டிச 05) தமிழ்நாடு அரசு பொது விடுமுறை அறிவித்துள்ள நிலையில் பொதுமக்கள் மற்றும் மெட்ரோ பயணிகள் அவசியமின்றி வெளியில் வர வேண்டாம்.
அவசிய தேவை உள்ளவர்கள் மட்டும் பாதுகாப்பாக பயணம் செய்யுமாறு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் கேட்டுக்கொள்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: MICHAUNG புயல் எதிரொலி: சென்னை - தென் மாவட்டங்கள் - சென்னை ரயில் சேவைகள் ரத்து!